கல்வி துணை அமைச்சர் கமலநாதனின் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உலு பெர்ணம் களும்பாங் தமிழ்ப்பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிரியர்கள் இல்லை அல்லது பற்றாக்குறையைக் கண்டித்து மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்திருப்பது, அவ்விவகாரம் புரையோடிய புண், நீண்ட காலமாகத் தீர்வின்றி இழுக்கடிக்கப்பட்டுள்ள விவகாரம் என்பதனையே காட்டுகிறது.
மாணவர்களும் பெற்றோர்களும் வெறுப்பின் விளிம்பில் இருக்கின்றனர். கல்வி அமைச்சின் வஞ்சனையான போக்கைக் கண்டிக்க வேறு வழியின்றி மாணவர்களைக் களத்தில் இறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் தள்ளப்பட்டுள்ளதை உணர முடிகிறது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
கடந்த இரண்டு வருடங்களாக ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் போதிக்க முறையான ஆசிரியர் இல்லை என்றால், அங்குப் பயிலும் மாணவர்கள், தேர்வுகளில் எப்படி அப்பாடத்தைச் சிறப்பாக எழுத முடியும். போட்டிமிக்க இன்றைய கல்வி சூழலுக்கு அவர்களை எப்படித் தயார்படுத்துவது என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
கடந்த இரண்டு வருடங்கள் என்பது மிக நீண்ட காலம், கண்களைப் போல் பிள்ளைகளைப் போற்றி வளர்க்கும் எந்தப் பெற்றோரும், கண் முன்னே, நம் பிள்ளையின் எதிர்காலம் கருகுவதைக் கண்டு வாழ இருக்க முடியாது. ஆனால் அதனை இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்ட பெற்றோர்களின் செயல் என்னைப் பிரமிக்கச் செய்கிறது. துணிந்து தக்க நடவடிக்கையில் இறங்கிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயல் பாராட்டுக்குரியது என்ற அவர்.
அதன் தொடர்பில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ராஜக்குமார் பத்துமலை கைது செய்யப் பட்டதாகக் காணொளி வழி தகவல் கிடைத்தது. இந்த விவகாரத்தில் தண்டிக்கப்பட வேண்டியது கல்வி இலாக்கா அதிகாரிகள், அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி துணை அமைச்சருமான கமலநாதன், ஆனால் கைது செய்யப்பட்டது பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரா? ஏன்? என்று கேட்டார் என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
இந்த விவகாரத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருக்கும், அப்பள்ளி பெற்றோர், மாணவர்களுக்கும் இந்தியச் சமுதாயம் துணை நிற்கும், கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காது! இது நாட்டில் உள்ள மற்றத் தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் நிலைமையின் பிரதிபலிப்பேயாகும் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
ஒரு பக்கம் நமது பட்டதாரிகளுக்கு வேலை இல்லை, மறு பக்கம் பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை: இது எதைக் காட்டுகிறது? தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் தவறுகிறது என்பதைத்தானே காட்டுகிறது. இந்தியப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால் சமுதாயம் மீண்டுவிடும் என்ற அச்சமா? இல்லை, தமிழ்ப்பள்ளிகளின் தேவை நிறைவு செய்யப்பட்டால் இச்சமுதாயம் மலர்ந்துவிடும் என்ற பயமா?
பிரதமர் நஜிப்பின் நம்பிக்கை சாயம் நீண்ட காலத்திற்கு முன்பே வெளுத்துவிட்டது. இப்பொழுது அவரின் “ப்புளு பிரிண்ட்” எவ்வளவு போலியானது என்பதனை நாட்டுக்குக் காட்ட இன்றைய ஆட்சியில் ஒரு தமிழ்ப்பள்ளியின் அவலநிலையை மட்டுமல்ல, பரவலாக எங்கும் எதிலும் இந்தியச் சமுதாயம் எதிர்நோக்கும் இடர்பாட்டை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
ஆக அவரின் (ப்புளு பிரிண்ட்) இந்தியர்களுக்கான மேம்பாட்டு திட்ட வரைவு கருகிய பயிருக்கு உரமிட்டு நீர் பாய்ச்சுவது போலாகும், ஆனால் இந்தியச் சமுதாயத்திற்குத் தேவை வளரும் பயிருக்கு நீரும் உரமும் என்பதனை அறியாதவரா பிரதமர் நஜிப் என்று கேட்ட அவர், 1957க்கு முன் பிறந்தவர்களின் அடையாளப்பத்திரம் குறித்த ஆய்வும் அக்கறையும் இப்பொழுது தேவையா? அல்லது பள்ளியில் கூடக் காலடி எடுத்து வைக்க முடியாமல் பிறப்பு பத்திர விவகாரத்தில் சிக்கி அல்லல் படும் தனித்துவாழும் தாய்மார்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அக்கறையா? எது நீதியானது? எது இன்று சமுதாய வளர்ச்சிக்கு அவசரம்? அவசியம்? என்று வினவினார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான சேவியர் ஜெயக்குமார்.
இப்பொழுது பி-40 என்பது என்ற அடிப்படை வருமான அளவு கோட்டை வைத்துப் பலவும் பேசப் படுகிறது. இந்தியர்களுக்கான மேம்பாட்டு திட்ட வரைவும் அதனையே மையமாகக் கொண்டுள்ளது. ஆனால் குறுகிய வருமானத்திற்கான அடிப்படை காரணத்தை அரசாங்கம் ஏன் மறைக்கிறது? அதனை நிறைவு செய்ய இந்த அரசாங்கம் ஏன் தயங்குகிறது? இதுவும் ஓர் அரசியல் ஸ்டண்டா?
எடுத்துக்காட்டு, மலிவான அந்நியத் தொழிலாளர்கள், அதனைக் கட்டுப்படுத்தி, கவனமுடன் கையாண்டால் உள்நாட்டு தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிக்கும், அதிக ஊதியம் கிட்டும். அரசாங்க துறைகளில் வேலைக்கு ஆள் சேர்ப்பது முதல் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிலையங்களின் மாணவர்கள் சேர்க்கை வரை எதிலும் புது வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் போது சமக் கல்வித் தகுதி கொண்டவர்களில் குடும்ப, சமூகச் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டால் வாடும் பயிருக்கு நீர் விடுவதாக அமையாதா? என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான சேவியர் ஜெயக்குமார்.