முஸ்லிம் அல்லாதவர்கள் மலேசியாவின் பிரதமர் ஆகும் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று கூறினார்.
நேற்று, பாஸ் கட்சியின் உலாமா மன்றம் மலாய்-முஸ்லிம் மட்டுமே பிரதமராக முடியும் என்பதை உறுதி செய்வதற்கு மலேசிய அராமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று நிறைவேற்றியுள்ள ஒரு தீர்மானம் பற்றி கருத்துரைத்த குவான் எங் இவ்வாறு கூறினார்.
இத்தீர்மானம் குறித்து தாம் வருத்தப்படுவதாக கூறிய குவான் எங், ஏதோ பிரதமர் பதவியின் மேல் விருப்பம் கொண்டுள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் இருப்பது போல், மலாய்-முஸ்லிம்தான் பிரதமராக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் தீவிரவாத மற்றும் இனவாத உணர்ச்சிகளைத் தூண்டுவதாகத் தெரிகிறது என்றார்.
இது ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது ஏனென்றால் பிரதமர் பதவியைக் கோரும் முஸ்லிம் அல்லாதவர் எவரும் இல்லை. எதிரணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் ஒரு மலாய்-முஸ்லிம், அவர் அன்வார் இப்ராகிம் என்று குவான் எங் தெளிவாகக் கூறினார்.
பாஸ் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக மலாய்-முஸ்லிம்களிடையே அச்சத்தையும் வெறுப்பையும் உண்டாக்குவதாகும் என்று குவான் எங் இன்று அவரது முகநூல் வீடியோவில் பதவி செய்துள்ளார்.
மலேசியா ஒரு பல்லின நாடு, இவ்வாறான நடவடிக்கைகள் ஆபத்தானவை, குறிப்பாக மலாய்க்காரர் அல்லாத மற்றும் முஸ்லிம் அல்லாத தலைவர்களை அவமதிப்பது, என்று குவான் எங் மேலும் கூறினார்.