ஹிண்ட்ராப் ஸக்கீரின் பிஆர் தகுதியை அகற்ற ஐநா உதவியை நாடுகிறது

 

Waythatounஇந்தியக் குடிமகனாகிய ஸக்கீர் நாய்க் பயங்கரவாதம் சம்பந்தப்பட்டவற்றில் தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படுவதையொட்டி அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிரந்தமாகத் தங்கும் தகுதியை (பிஆர்) அகற்ற மலேசிய அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுமாறு பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (ஹிண்ட்ராப்) ஐநா பாதுகாப்பு மன்றத்தின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவுக்கு (சிடிசி) கடிதம் எழுதியுள்ளது.

நேற்று, ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி ஐநா தலைமையகத்திலிருக்கும் சிடிசி தலைவர் அப்டெல்லத்திப் அபொலத்தாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஸக்கீர் மலேசியாவில் இருத்தல் மற்றும் அவரது நடவடிக்கைகள் பற்றியும் புகார்கள் செய்துள்ளார்.

மலேசியா ஒரு சிடிசி உறுப்பினர் என்பதைச் சுட்டிக் காட்டிய வேதமூர்த்தி, ஸக்கீரால் விளையவிருக்கும் “ஆபத்துகள்” குறித்து சிடிசி மலேசியாவுக்கு ஆலோசனை கூற வேண்டும் என்று அவரது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலேசியா பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒரு தளமாக அமைவதை மலேசியர்கள் விரும்பவில்லை என்பதை வலியுறுத்திய வேதமூர்த்தி, மலேசியா சிடிசியின் உறுப்பினர் என்ற முறையில் ஸக்கீருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிஆர் தகுதையை அகற்றக் கடமைப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

மலேசியாவின் பொதுநலத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஸக்கீரின் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் அவற்றை தடுத்து நிறுத்தவும் அவரை இந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு மலேசியாவுக்கு இன்னொரு நாட்டிலிருந்து வந்தவரை அவரது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் கோட்பாட்டை (extradition principle) பின்பற்றும்படி சிடிசி ஆலோசனை கூற வேண்டும் என்று வேத மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.