ஸக்கீர் வழக்கில் பெர்காசா பங்கேற்க அனுமதி

 

Waythatounசமயப் போதகர் ஸக்கீர் நாய்க்கை கைது செய்து அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் பெர்காசா என்ற மலாய்க்காரர்கள் உரிமைப் போராட்ட அமைப்பு மூன்றாம் தரப்பாக பங்கேற்க வாதிகளின் ஒப்புதலோடு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பி. வேதமூர்த்தி மற்றும் 18 பேர், பிங்கோர் சட்டமன்ற உறுப்பினர் ஜெப்ரி கிட்டிங்கான், வழக்குரைஞர் சித்தி காசிம் மற்றும் சிபிஐ இயக்குனர் லிம் டெக் கீ ஆகியோர் உட்பட, இவ்வழக்கை மார்ச்சில் பதிவு செய்தனர்.

ஸக்கீர் நாட்டின் பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கு ஒரு மிரட்டலாக இருக்கிறார் என்று நீதிமன்றம் பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் வாதிகள் கோரியுள்ளனர்.

பெர்காசாவின் மனுவுக்கு வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; பிரதிவாதிகள் முடிவை நீதிமன்றத்திடம் விட்டு விட்டனர் என்று பெர்காசாவின் வழக்குரைஞர் அட்னான் செமான் தெரிவித்தார்.

பின்னர், நீதிபதி கமலுடின் முகமட் சைட் பெர்காசாவின் மனுவை அனுமதித்தார்.