தோட்டங்களில் கால்நடை வளர்ப்பாளர்களை விரட்டியடிக்கும் சைம் டார்பியின் திட்டம், அச்சத்தில் ஜெயக்குமார்

 

cowshed1மலேசியா முழுவதிலுமுள்ள அதன் தோட்டங்களில், கால்நடை வளர்ப்பு நடவடிக்கையை நிறுத்தப்போவதாக சைம் டார்பி நிறுவனம் அறிவித்திருப்பது தனக்கு வியப்பை அளிப்பதாக, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 19,2017 இல், சுங்கை சிப்புட் ஈப்பில் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் சைம் டார்பி நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி ரஷாலி இந்த அறிவிப்பைச் செய்துள்ளார். அக்கூட்டத்தில் ஈப்பில் மற்றும் கமிரி தோட்டங்களைச் சேர்ந்த 13 கால்நடை வளர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சைம் டார்பியின் இம்முடிவு நடைமுறைக்கு வந்தால், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தங்கள் வருமானத்தை இழப்பதோடு நாட்டு மக்களின் பால் மற்றும் இறைச்சி தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாமல் போகக்கூடும் என டாக்டர் ஜெயக்குமார் அச்சம் தெரிவித்தார்.

“தற்போதைய நிலவரப்படி, நாட்டின் பால் மற்றும் மாட்டிறைச்சி தேவையை, முறையே 10 மற்றும் 15 விழுக்காட்டை மட்டுமே நம்மால் cowshed2சுயமாகப் பூர்த்தி செய்ய முடிகிறது. இந்நிலையில், சைம் டார்பி நிறுவனம் கால்நடை வளர்ப்பாளர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றினால், நாட்டில் இந்த இரண்டு உணவுப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். காரணம், மேம்பாட்டுத் திட்டங்களால் துரத்தியடிக்கப்படும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு, இதுவரை எந்த மாநில அரசாங்கமும் பண்ணை வைக்கவோ அல்லது மேய்ச்சலுக்காகவோ மாற்று நிலம் வழங்கவில்லை”, என அவர் கூறினார்.

“தோட்டப்புறங்களில் மாடு வளர்ப்பது, கடந்த 80 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஒன்று. தோட்ட நிர்வாகங்கள் இதற்கு அனுமதி அளித்திருந்தோடு அரசாங்கமும் இதற்கு ஊக்குவிப்பு அளித்துள்ளது. இதுநாள் வரை, கால்நடை வளர்ப்பால் தோட்ட நிர்வாகத்தின்  இலாபத்திற்கு எந்தவொரு இடையூறும் இருந்ததில்லை. அப்படியிருக்க, தோட்டப்புறங்களில் கால்நடை வளர்ப்பு வெகுவாக குறைந்துவரும் இந்நேரத்தில், சைம் டார்பி ஏன் இம்முடிவை எடுக்க வேண்டும்?”, அவர் வினவினார்.

cowshed3சம்பந்தப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இவ்விவகாரத்தைத் தமது கவனத்திற்குக் கொண்டுவந்ததாக கூறிய ஜெயக்குமார், அடுத்த இரண்டு வாரத்திற்குள் சைம் டார்பி நிறுவனத்துடன் இது தொடர்பாகத் தாம் கலந்துபேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“அரசாங்கத்துடன் தொடர்புடைய (GLC) சைம் டார்பி நிறுவனம் ‘பெருநிறுவன சமூகப் பொறுப்பை’ ஆதரிக்கும் ஒரு மாபெரும் நிறுவனமாகும். எனவே, அதன் நலனை மட்டும் கருதாமல் கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்களின் தேவையைக் கருதி இந்த முடிவை அந்நிறுவனம் மாற்றியமைக்க வேண்டும்”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.