சிலாங்கூர் நிலையற்றிருக்கிறது என்கிறார் நஜிப், மாற்றம் வரலாம் என்கிறார் ஹாடி

najibபக்கத்தான்   ஹராபான்   சிலாங்கூரில்  எல்லாமே   நன்றாகத்தான்  உள்ளது   ஒரு  பிரச்னையும்  இல்லை    என்று   கூறினாலும்   பிரதமர்    நஜிப்   அப்துல்  ரசாக்  மற்றும்    பாஸ்   தலைவர்  அப்துல்    ஹாடி   ஆவாங்கின்   கருத்து   வேறு  விதமாக  உள்ளது.   அவர்கள்    மாநிலத்தில்    பக்கத்தான்  பிடி  தளர்ந்து   வருவதாக    நினைக்கிறார்கள்.

நஜிப்,  இன்று   தம்   வலைப்பதிவில்,  மாநிலத்தைக்  கட்டிக்காக்க  முடியாத  ஹராபான்      நாட்டை  எப்படிக்  கட்டிக்காக்கப்  போகிறது    என்று   கேள்வி   எழுப்பியிருந்தார்.

“இப்போது    சிலாங்கூர்  மாநிலத்தில்  அரசியல்  நிலைத்தன்மை  இல்லை. பாஸ்  அல்லது   டிஏபி   (மாநில)  அரசிலிருந்து   விலகிக்  கொண்டால்    மந்திரி  புசார்  நிலையும்  மாநில   அரசின்  நிலையும்    ஆட்டம்   கண்டுவிடும்.

“இதேபோன்ற  நிலைமை    கூட்டரசு   நிலையிலும்   நிகழ்ந்தால்,   என்னவாகும்,    நினைத்துப்   பாருங்கள்.  பொருளாதார      வளர்ச்சியை     உறுதிசெய்து  மக்களின்   நல்வாழ்வைக்  காக்கவும்    அரசாங்கம்   வலுவான,  அனுபவம்  வாய்ந்த,   ஒரே   குறிக்கோளை    கொண்ட   கட்சிகளின்   கூட்டணியால்   வழிநடத்தப்படுவது   அவசியம்”,  என்றவர்   சொன்னார்.

இதனிடையே,  ஹாடி    சிலாங்கூரில்    மாற்றம்  நிகழும்    சாத்தியம்   இருப்பதாக     கோடிகாட்டியிருப்பதாக   உத்துசான்   மலேசியா    செய்தி   ஒன்று   கூறுகிறது.

சிலாங்கூரில்   பிகேஆர்,  பாஸ்,  அம்னோ     சட்டமன்ற   உறுப்பினர்கள்   சேர்ந்து   மாநில    அரசைக்   கவிழ்க்கும்   முயற்சி  நடப்பதாகக்  கூறும்   வதந்திகள்   குறித்து    கருத்துரைக்குமாறு   கேட்டதற்கு  ஹாடி “அது  சகஜம்தானே,  அவ்வாறு   நிகழலாம்”  என்றுரைத்தார்.

பிகேஆர்  சட்டமன்ற  உறுப்பினர்கள்    சிலர்,  தற்போதைய   மந்திரி  புசாரான  பிகேஆர்  துணைத்    தலைவர்    அஸ்மின்  அலியைப்   பதவியிலிருந்து    அகற்ற   கட்சிதாவப்   போகிறார்கள்     என்ற  வதந்திகள்   உலவுகின்றன.  ஆனால்,   சட்டமன்ற   உறுப்பினர்   பலர்   அதை   மறுத்துள்ளனர்.

வெளிநாடு     சென்றுள்ள    அஸ்மின்  இன்று     நாடு    திரும்புகிறார்.  அவரை  வரவேற்க    சட்டமன்ற   உறுப்பினர்கள்   அனைவரும்   விமான  நிலையத்துக்கு     வரவேண்டும்    என்று   மாநில    அரசு-ஆதரவு    சட்டமன்ற  உறுப்பினர்  மன்றம்   குறுஞ்செய்தி   அனுப்பி  இருப்பதாகக்  கூறப்படுகிறது.

இதனிடையே,   நஜிப்  தம்  வலைப்பதிவில்   எதிரணிக்  கூட்டணியை    வேறு  வகையிலும்   கிண்டல்   செய்துள்ளார்.

எதிரணிக்  கூட்டணி  அடிக்கடி   உள்ளுக்குள்   சச்சரவிட்டுக்  கொள்வதை    அவர்   சுட்டிக்காட்டினார்.  இது   அமைச்சரவை   மாற்றங்களுக்கு   வழிகோலும்   என்றார்.

“அதன்  விளைவாக,   அரசாங்கம்    வழங்கும்    அடிப்படைச்   சேவைகள்   தடைப்படலாம்   அல்லது   பாதிப்புறலாம்”,  என்றவர்   சொன்னார்.

ஆனால்,  நஜிப்பே    2014-இலிருந்து    நான்கு   தடவை    அமைச்சரவையில்   மாற்றம்   செய்திருக்கிறாரே.

2015   அமைச்சரவை   மாற்றத்தின்போது   அப்போதைய    துணைப்  பிரதமர்   முகைதின்   யாசினையும்    இன்னொரு   அமைச்சரான   ஷாபி   அப்டாலையும்  அமைச்சரவையிலிருந்து   தூக்கினார்.

அதே  ஆண்டில்   மேலும்   மாற்றங்கள்   செய்ய  முயன்றபோது   இரண்டாவது   நிதி   அமைச்சராக   இருந்த   ஹுஸ்னி   ஹனட்ஸ்லா    வேறு   அமைச்சுக்கு   மாற்றப்படுவதற்குப்    பதில்   பதவி   விலகுவதே  மேல்   என  நினைத்து   பதவி   விலகினார்.