தேர்தல் சூடு பிடிக்கிறது: ஹமிடிக்கு இனவாதம் தெரியாதாம்

 

srimurugandpmஇன்று 35 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடும் ஶ்ரீமுருகன் மையத்தில் (எஸ்எம்சி) உரையாற்றிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி தம்மை ஓர் இனவாதமற்றவர் என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டார்.

இந்தியர்கள் மற்றும் சீனர்களுடனான அவரது நட்புறவைப் பற்றியும் சளைக்காமல் பேசினார். கடந்த காலத்தில் அவர் எப்படி அவர்களுடன் சேர்ந்து வேலை செய்தார் என்பதையும் கூறினார்.

“நான் ஒரு வணிகராக இருந்த போது, எனது செயலாளர் இருந்தவர் ஒரு பஞ்சாபி பெண்…எனது கணக்காளர் மற்றும் கணக்காய்வாளர் பாலா அண்ட் கம்பணி.

“நான் ஒரு மலாய்க்காரர், ஆனால் நட்புறைவை மதிக்கிறவர்… நான் ஒரு நிறக்குருடு (இனவாதம் அற்றவர்); இதுதான் ஆதாரம்”, என்று ஹமிடி அவது உரையின் இறுதியில் கூறினார்.

கல்வியில் இனம் ஓர் அம்சமாக இருக்கக்கூடாது என்று கூறிய ஹமிடி, இந்தியர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பை மேம்படுத்துவதற்கான எஸ்எம்சியின் விருப்பத்தை அமைச்சரவைக்கு விரைவில் கொண்டுசெல்லப் போவதாக அவர் தெரிவித்ததோடு அக்கல்வி கழகத்திற்கு ரிம3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார்.

பிரதமர் நஜிப் நகர்புற வறுமையை ஒழிப்பதற்காக தமது தலைமையில் ஓர் அமைச்சரவைக் குழுவை நியமித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அக்குழுவில் அம்னோ அமைச்சர்களைத் தவிர்த்து எம்சிஎ தலைவர் லியோ தியோங் லாய், மஇகாவின் தலைவர் எஸ். சுப்ரமணியம், எஸ். தேவமணி மற்றும் பி. கமலநாதன் ஆகியரோடு கெராக்கான் உறுப்பினர் ஜே. லோக பால மோகன் ஆகியோரும் இடம்பெற்றிருப்பதாக துணைப் பிரதமர் அறிவித்தார்.

“இது ஏன் என்றால், நகர்புற வறுமை மலாய்க்காரர்களிடம் மட்டும் இல்லை, அது இந்தியர்களிடமும் சீனர்களிடமும் இருக்கிறது.

“நகர்புற வறுமையை ஒழிப்பதில் நான் உண்மையிலேயே நிறக்குருடு”, என்றாரவர்.