சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமை 14வது பொதுத் தேர்தலில் பங்கேற்பதற்கு தோதாக மன்னித்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை சில அமைப்புகள் ஒன்றுசேர்ந்து பேரரசர் ஐந்தாம் சுல்தான் முகம்மட்டிடம் தாக்கல் செய்துள்ளன.
அவை ‘பேபாஸ்கான் அன்வார் (அன்வாரை விடுவிப்பீர்) என்னும் விளக்கக் கூட்டங்களை நாடு முழுக்க நடத்தவும் திட்டமிட்டுள்ளன.
“அன்வார் மன்னிக்கப்பட்டால் அவரால் தேர்தலில் கலந்துக்கொள்ள முடியும். அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம்.
“இல்லையென்றால் அடுத்த ஆண்டு ஜூன் 10-இல்தான் அன்வார் விடுதலை ஆவார், அதற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்”, என ஓடாய் ரிபோர்மிஸ் பேச்சாளார் ரோனி லியு கூறினார். அவரும் ஓடாய் ரிபோர்மிஸ் தலைவர் சாஆரி சுங்கிப், பிகேஆர் போர்ட் டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் எம். ரவி ஆகியோரும் இன்று காலை இஸ்தானா நெகராவுக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசினர்.
ஓடாய் ரிபோர்மிஸ் 1998-இல், ரிபோர்மாசி இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்ட ஓர் அமைப்பாகும்.