எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹரப்பான் வெற்றி பெற்றால், பிரதமர் பதவிக்கான அதன் வேட்பாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று கூறினார்.
ஆனால், தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளரின் பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
பிரதமர் பதிவிக்கான வேட்பாளர் இருக்கிறார். அவரது பெயரை சரியான நேரத்தில் அறிவிப்போம் என்றார் அஸ்மின்.
பிரதமர் பதவிக்கான வேட்பாளரை இன்னும் தேர்வு செய்யாமல் இருப்பதால், ஹரப்பான் பொதுத் தேர்தலைச் சந்திக்க தயாரா என்று கேட்கப்பட்ட போது, அஸ்மின் இவ்வாறு பதில் அளித்தார்.
பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் பிரதமர் பதவிக்கும், அஸ்மின் அலி துணைப் பிரதமர் பதவிக்கும் வேட்பாளர்களாக நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அஸ்மின், நாட்டை வழிநடத்துவதற்கு திறமையான தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். தாம் சிலாங்கூருக்கான ஒரு சிறிய தலைவர் மட்டுமே என்றார்.
அன்வார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடத் தகுதி பெறும் வரையில் ஓர் இடைக்கால பிரதமரை அடையாளம் காண்பதற்கு ஹரப்பான் விரும்பியது.
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் எதிரணித் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயிலை இடைக்காலப் பிரதமராகவும் முகைதின் யாசினை துணைப் பிரதமரகவும் நியமிக்க விரும்பியதாகவும் கூறப்பட்டது.
இப்போது, முன்னாள் பிரதமரும் தற்போதைய பெர்சத்து தலைவருமான மகாதிரை எதிர்க்கட்சியினர் ஒருமித்த மனதுடன் பிரதமர் பதவிக்கான ஹரப்பான் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சரும் தற்போதைய டிஎபி உறுப்பினருமான ஸைட் இப்ராகிம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.