பாஸ் – பிகேஆர் உறவு முறிந்தது

 

Passevestieswithpkrபிகேஆர் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள பாஸ் கட்சியின் முக்தாமர் எடுத்திருந்த முடிவை அக்கட்சியின் ஷியுரா மன்றம் நிலைநிறுத்தியது.

இன்று பின்னேரத்தில், கோலாலம்பூரில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் அம்மன்றத்தின் செயலாளர் நிக் முகம்மட் ஸவாவி சாலே இதனை அறிவித்தார்.

அரசியல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த கூறுகளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டது என்று கூறிய அவர், “ஆகவே அரசியல் உறவுமுறை இரத்து செய்யப்பட்டது”, என்று அவர் தெரிவித்தார்.

அந்த அரசியல் ஒப்பந்தத்தின் பல கூறுகள் மீறப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது, பாஸ் முன்னெடுத்த பல இஸ்லாம சம்பந்தப்பட்ட திட்டங்களை பிகேஆர் ஆதரிக்காததோடுமட்டுமல்ல, அவற்றை எதிர்த்துள்ளது என்று நிக் முகம்மட் கூறினார்.

எடுத்துக்காட்டாக, ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் (சட்டம் 355) க்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அவர் குறிப்பிட்டார்.

பிகேஆருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கதவு இன்னும் திறந்திருக்கிறதா என்று கேட்டதற்கு, “ஆம், சந்திக்கலாம் (பேசுவதற்கு)”, என்று அவர் மேலும் கூறினார்.