கடந்த 12மாதங்களில் நடந்தேறிய மிகப் பெரிய பேரணி என்றால் அது நேற்றைய அம்னோ பேரணிதான். அம்னோவின் வலிமையைக் காண்பிக்கும் முகமாக 80ஆயிரம் ஆதரவாளர்கள் புக்கிட் ஜலில் தேசிய விளையாட்டரங்கில் கூடியிருந்தனர்.
71ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காகக் கூடிய கூட்டம் அரங்கை முழுமையாக நிறைக்கவில்லைதான் -மூன்றில் ஒரு பகுதி இருக்கைகள் காலியாகத்தான் கிடந்தன- என்றாலும் கடந்த நவம்பரில் கூடிய பெர்சே 5 பேரணியில் கலந்து கொண்டவர்களைவிட இதில் கலந்து கொண்டவர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகம். 55ஆயிரம் பேர் கலந்து கொண்ட பாஸின் 355 சட்டப் பேரணியைக் காட்டிலும் இப்பேரணி பெரிதுதான்.
அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டு அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் புளகாங்கிதம் அடைந்தார். திடீர் தேர்தல் குறித்தும் அவர் கிண்டலடித்தார்.
“நாளையே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் (தேர்தலுக்கு) நாம் தயாராக இருக்கிறோமோ?”, என்றவர் வினவ, கூட்டத்தினர் “ஆம்” என்று ஆர்வத்துடன் முழக்கமிட்டனர்.
அம்னோவின் உறுப்பினர் எண்ணிக்கை மூன்று மில்லியன். அதில் பேரணிக்கு வந்திருப்பர் ஒரு சிறு பகுதியினர்தான் என்று நஜிப் பெருமையாகக் குறிப்பிட்டார்.
இப்படி ஒரு புறம் பெருமையடித்துக் கொண்டும் அரசியல் வலிமையைக் காண்பிக்க சில சாகசங்களும் அரங்கேற்றப்படும் வேளையில் மறுபுறம் அம்னோவுக்கு மக்களின் ஆதரவு மிகவும் குறைந்து போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
பிகேஆர் தொடர்புள்ள இன்வோக், ஜனவரியில் வெளியிட்ட ஆய்வில் அம்னோவுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு 40 விழுக்காடுதான் என்று குறிப்பிட்டது.
விலைவாசி உயர்வு அரசுப் பணியாளர்களை ஆளும் கட்சிக்கு எதிராக திருப்பி விடலாம் என அம்னோ கட்சியினரே கவலை கொண்டிருப்பதாக ராய்ட்டரும் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனிடையே, அம்னோவிலிருந்து பிரிந்து சென்றோரால் உருவாக்கப்பட்ட பார்டி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) -முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் வழிகாட்டலில்- மலாய்க்காரர் ஆதரவை நிறைய பெற்று அம்னோவுக்கு ஒரு மிரட்டலாக விளங்குகிறது.
அந்த வகையில் அடுத்த தேர்தலில் அம்னோ கடும் போட்டியை எதிர்நோக்கலாம்.
இப்படிப்பட்ட நிலவரங்களால் கவலை கொண்டுள்ள அம்னோ அதை மூடி மறைக்கத்தான் 71ஆம் ஆண்டு நிறைவை மிகப் பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்தது போலும். அம்னோ 70ஆம் ஆண்டு நிறைவு விழாகூட புத்ரா உலக வாணிக மையத்தில் ஆரவாரமின்றி அடக்கமாகத்தான் நடந்தது.
கூட்டத்தைப் பெரிதாகக் காண்பிக்க நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கட்டாயப்படுத்தியோ ஏதோ சொல்லி ஏமாற்றியோ அழைத்து வரப்பட்டிருந்தார்கள்.
அவர்களுக்குப் பரிசுப் பொருள்கள் கொடுக்கப்பட்டன. இலவச போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களைச் சுமந்த வந்த பேருந்துகள் கெஸாஸ் நெடுஞ்சாலை நெடுகிலும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
உண்மை நிலவரத்தை மூடிமறைக்க கூட்டத்தை வைத்து அம்னோ கூத்தாடுகிறது என்று கூறுவதை வைத்து அம்னோவின் கதி அதோகதிதான் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.
நஜிப் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கவே செய்கிறது. எதிரணி பிளவுபட்டுக் கிடப்பது அவருக்கு வெற்றியாகும்.
பாஸ், பக்காத்தான், பாரிசான் நேசனல் என மும்முனைப் போட்டி எதிரணி வாக்குகளைச் சிதறடிக்கும். அது போதும் அம்னோ/ பாரிசான் வெற்றிபெற.
யாரும் பெர்சே 5 ஐ போல் திட்டம் போட்டு தடுக்கவில்லை , இலவசமாக பேருந்தில் கொண்டுவரப்பட்ட கூட்டம். (கூட்டத்தைப் பெரிதாகக் காண்பிக்க நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கட்டாயப்படுத்தியோ ஏதோ சொல்லி ஏமாற்றியோ அழைத்து வரப்பட்டிருந்தார்கள்.)
அம்னோ பேரணி என்றால் சாலை தடுப்பு, தடைகள் கிடையாது.சுதந்திரமாக பேரணியில் கலந்துகொள்ளலாம். மற்ற பேரணி என்றால் தடைகளுக்கு அளவே இல்லை.
அடுத்த பொதுதேர்தலில் அடையாளம் தெரியாமல் அழிந்து போகவிருக்கும் அம்னோவுக்கு முன்கூட்டியே இறுதி மரியாதை செலுத்துவதற்காக கூடிய கூட்டம் என்றே தோன்றுகிறது.