ஹரப்பான் வென்றால், ஐந்து ஆண்டுகளில் ஒரு மில்லியன் வேலைகள் உருவாக்கப்படும்

 

onemillioninfiveyearsஅடுத்து வரும் பொதுத் தேர்தலில் எதிரணி மத்திய அரசைக் கைப்பற்றினால் ஐந்து ஆண்டுகாலத்தில் ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்கும் என்று பக்கத்தான் இளைஞர்கள் கூறுகின்றனர்.

“அசுத்தமான வேலைகளை” ஈர்க்கும் தன்மையுடையவைகளாக மாற்றுவது மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களைக் குறைப்பது ஆகியவற்றின் வழி இதனை அடையும் நோக்கத்தை கூட்டணி கொண்டிருப்பதாக பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இளைஞர் பகுதி தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இப்போது 3.3 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளில் அதை 2.5 மில்லியனுக்குக் குறைக்கும் நோக்கத்தை நாங்கள் கொண்டுள்ளோம் என்று பெட்டாலிங் ஜெயாவில் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

சரியான சம்பளம் கொடுத்தால், ஒரு மலேசியர் இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலையைச் செய்ய முடியும் என்றாரவர்.

பினாங்கு மாநில அரசு அதன் நகராண்மைக் கழக வேலைகளில் 2,437 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று டிஎபியின் டயானா சோபியா முகமட் டாவுட் அக்கூட்ட்டத்தில் கூறினார்.

அசுத்தமான, ஆபத்தான மற்றும் கடினமான (3டி) வேலைகளில் இளைஞர்கள் நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பது தவறு என்று கூறிய அவர், நல்ல சம்பளம் கொடுத்தால், அவர்கள் செய்வார்கள் என்றாரவர்.

இச்செய்தியாளர் கூட்டத்தில் பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர் சங்கீதா ஜெயக்குமார் மற்றும் டிஎபி பாசிர் பின்ஜி சட்டமன்ற உறுப்பினர் ஹோவர்ட் லீயும் பங்கேற்றிருந்தனர்.

புள்ளிவிபர இலாகவின் தகவல்படி, 2016 ஆம் ஆண்டில் 504,100 பேர் வேலையில் இல்லாதவர்கள் என்றும் அதில் 60.4 விழுக்காட்டினர் 20 – 29 வயதிற்கு இடையிலான இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.