நீதியான போராட்டத்தில் கெஅடிலான் கட்சி தொடர்ந்து பங்கெடுக்கும்

 

 

xavier jayakumar pkrஇந்நாட்டு மக்களின் நலனைக் கருதியே, அடுத்த பொதுத்தேர்தலில் பல்முனைப் போட்டிகள் உருவாவதைத் தவிர்க்க கெஅடிலான்  கட்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. எந்த மாதிரியான சவால்களை எதிர்நோக்கினாலும் அதன் பணி தொடரும்  என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

இந்நாட்டில் எதிர்க்கட்சி அரசியலைச் சொகுசான வாழ்வுக்கான பஞ்சணையாகவோ சிகப்பு கம்பள விரிப்பாகவோ  எவரும் கருதுவது  இல்லை. மக்களின் வாழ்வை வளமாக்கும் ஒரு போராட்டக்களம் என்றே எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நாட்டு மக்களும் கூட அபிப்பிராயம்  கொண்டுள்ளனர்.

 

அப்படிப்பட்ட ஒரு போராட்டக்களத்தில்  இருக்கும் நாம், நமது மக்களின் நல்வாழ்வில், வாழ்வு மேம்பாட்டுக்கு உழைப்பதில்  உண்மையாக இருக்கிறோம் என்றால் சிறு தியாகங்களையாவது செய்யச் சித்தமாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே நீதிக்காக, கொள்கைக்காக, மக்கள் நல்வாழ்வுக்காக கெஅடிலான் எல்லாக் காலத்திலும் எல்லோருடனும்  ஒத்துழைத்து  வருகிறது.

 

கெஅடிலான் பாஸுடன் கொண்டுள்ள உறவும், ஜசெகவுடன் கொண்டுள்ள ஒத்துழைப்பும், அமான மற்றும் பிரிபூமி கட்சிகளுடன் கொண்டுள்ள புரிந்துணர்வும் எந்தத் தனி மனிதருக்கும் உபாயம் செய்யவோ, அல்லது ஒரு தனிப்பிரிவினரின்  ஆதிக்கத்தை வலுப்படுத்தவோ ஏற்படுத்திக்கொண்டதில்லை என்பதை மக்கள் நன்கு அறிவர்.

 

இன்றைய நம் நாட்டு பொருளாதாரம், அதன் வளர்ச்சி, மக்கள் வாழ்க்கைத்தரம்,  அனைத்தையும் சுற்றுவட்டார நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரே கட்சி ஆட்சியின் கீழ் இந்நாடும் ,மக்களும் அடைந்துள்ள மேம்பாடுகள் போதுமானதாக இல்லை, சரியான இலக்கை நோக்கி நாடு செல்லவில்லை என்பது புரியும் என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

நமது நாட்டின் விடுதலைக்குப் பின் சுதந்திரம் பெற்ற சிறிய நாடுகளான புரூனை மற்றும் சிங்கப்பூர் நாணயங்களின் மதிப்புடன் நமது ,ரிங்கிட்டை ஒப்பிட்டால் நமது பொருளாதார வலிமை என்னவென்பது தெரியும்,  ஆக ஒரு திறமையற்ற,  அதேவேளையில்  ஊழல் மிக்க ஆட்சியினால் நாட்டின் வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது, மக்களின்  நல்வாழ்வுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கப்படுகிறது என்பதை  அறியலாம்,

 

அவற்றைத்  தவிர்த்து மாபெரும் ஊழல்கள் – 1எம்டிபி, மாமிங்கோ, அந்நிய நாணய முதலீட்டு ஊழல், பி.எம்எ ஊ.ழல், பெர்ஜெயா ஊழல் என்று ஏகப்பட்ட ஊழல்களை நாடு கண்டுள்ளது, இவற்றை எதிர்க்கவும், மக்களுக்குச் சிறந்த பாதுகாப்பான ஒரு நாடாக மலேசியாவை  உருவாக்கவே எதிர்க்கட்சி கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.

 

கடந்த 2008 ம்ஆண்டு  நான்கு மாநிலங்களின்  ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால்  சிலாங்கூர்  மற்றும் பினாங்கு மக்கள்  அனுபவிக்கும் அனுகூலங்கள் மற்றும் நீண்டகாலமாக அங்குச் சமர்ப்பிக்கப்பட்டு வந்த பற்றாக்குறை பட்ஜட்டுகளை மாற்றி, இப்பொழுது உபரி பட்ஜெட்கள் தாக்கல் செய்யப் படுகிறது, இந்த 9 ஆண்டுகளில்  மாநில  அளவில்  குறிப்பாகச்  சிலாங்கூரில்வெள்ளி 400 கோடி கையிருப்பை ஏற்படுத்தமுடிகிறது. இவை அனைத்தும் பாரிசானுக்கு  மாற்றான ஓர் அரசின் சாதனைகள்.  அதேவேளையில் பாரிசானின் மத்திய மற்றும் மாநில ஆட்சியைப் பக்காத்தான் மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பாரிசானின் தவறான ஆட்சி முறையின்  அவலம் தெளிவாகத் தெரியும்.

 

ஆனால்,  இந்த அப்பட்டமான  உண்மையைக் கண்டும் நாட்டில் மாற்றத்தின் தேவையை விளங்கிக்கொள்ளப் பக்காத்தான் கூட்டணியின்  முக்கிய அரசியல் பங்காளியான பாஸ் கட்சியின் தலைவர்கள் தவறி இருப்பது வருத்தமளிக்கக்கூடிய செயலாகும்.

 

எதிர்க்கட்சிகளுக்குள் நானா நீயா போட்டியின் தேவையை விட, மக்களின் நல்வாழ்வுக்குக் கூடி உழைப்பதற்கான அவசியம் அதிகம், மக்களின் எதிர்பார்ப்புகளை மையமாக வைத்தே மக்கள்  கூட்டணி அமைக்கப்பட்டது, அதனை நிறைவு செய்ய, மக்களின் நீதியான போராட்டத்தில் கெஅடிலான் கட்சி தொடர்ந்து பங்கெடுக்கும், கோரிக்கைகளை முன்னெடுக்கும். சிற்சில  இடையூறுகள் கெஅடிலானை தடுத்து நிறுத்தாது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.