பின்னிரவில் நாடாளுமன்றக் கூட்டம் நடத்துவது பற்றிய சுல்தானின் அறிவுரைப் பின்பற்றுங்கள், மக்களவைத் தலைவருக்கு ஹரப்பான் வேண்டுகோள்

 

SpeakerPadikarநாடாளுமன்ற கூட்டங்கள் நள்ளிரவுக்குப் பின்னரும் நடத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகளின் மீது பழிபோடாமல் சுல்தான் கூறிய அறிவுரைக்கேற்ப நடந்துகொள்ளுமாறு மக்களவைத் தலைவர் பண்டிகர் மூலியாவை எதிரணி பக்கத்தான் ஹரப்பான் இன்று கேட்டுக்கொண்டது.

நாடாளுமன்றத்தின் மக்களவைக் கூட்டம் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 80 நாள்களுக்கு நடப்பதை உறுதி செய்வதும் இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலேசிய நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தலைவர்களின் மாநாட்டை திறந்து வைத்து உரையாற்றிய சிலாங்கூர் சுல்தான், இவற்றின் கூட்டங்கள் நள்ளிரவுக்குப் பின்னரும் தொடரக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

சுல்தானின் உரைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பண்டிகர் நாடாளுமன்ற கூட்டங்கள் அதிகாலை வரையில் நடத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம், ஏனென்றால் அவற்றிடம் சட்ட வரைவுகளைப் பரிசீலிப்பதற்கு நிழல் அமைச்சரவை இல்லை என்று கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய ஹரப்பான், 13 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் நாள்கள் குறைந்து விட்டன என்று கூறியது.

2013 ஆம் ஆண்டிலிருந்து, மக்களவை ஆண்டொன்றுக்கு சராசரி 55.5 நாள்களில் மட்டுமே கூட்டம் நடத்தியது. இது 2008 ஆம் ஆண்டில் நடந்ததற்கு முற்றிலும் மாறுபட்டது. அந்த ஆண்டில் 79 நாள்களுக்கு கூட்டங்கள் நடந்தன.

2016 ஆம் ஆண்டில், மக்களவை கூட்டங்கள் 53 நாட்கள் மட்டுமே நடந்தன என்று அது சுட்டிக் காட்டியது.

இதற்கு முற்றிலும் எதிர்மாறாக, ஆஸ்திரேலியா மற்றும் யுனைட்டெட் கிங்டம் ஆகிய நாடுகளில் நாடாளுமன்றம் ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 150 நாள்களுக்கு அமர்கின்றன.

இந்தக் கூட்டறிக்கையை ஹரப்பான் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா, பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், அமனா வியூக இயக்குனர் சுல்கிப்ளி அஹமட், பெர்சத்து வியூக இயக்குனர் ராயிஸ் ஹூஸ்சின் மற்றும் டிஎபியின் தேசிய அரசியல் கல்வி இயக்குனர் லியு சிந்தோங் ஆகியோர் வெளியிட்டனர்.