சீனாவுக்கு வருகை அளித்துள்ள பிரதமர் நஜிப்புடன் அவரது மகன் நோராஸ்மானும் வளர்ப்பு மகன் ரிஸா அசிஸ்சும் சென்றுள்ளது குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
சீனா, ஹாங்ஸாவ்வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நஜிப்புடன் அவரது மகன்களும் பங்கேற்றது குறித்து மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கைருடின் அபு ஹசான் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கத்தில் இவ்விரு மகன்களும் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை 30 மில்லியன் மலேசியர்களுக்கு தலைமைச் செயலாளர் விளக்க முடியுமா என்று கைருடின் வினவினார்.
குடிமக்களின் பிரகடனம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான கைருடின், நஜிப்புடன் சென்றுள்ள அவரது மகன் மற்றும் வளர்ப்பு மகன் ஆகியோரின் பயணச் செல்வுகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்று கேட்டுள்ளார்.
அவர்களின் பயணச் செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தால் அது சட்டத்திற்கு புறம்பானதுடன் அதிகார அத்துமீறல் ஆகும் என்று கைருடின் வலியுறுத்தியுள்ளார்.

























