பார்டி அமனா நெகாரா துணைத் தலைவர் சாலாஹுடின் ஆயுப், ஜோகூர் பாரு கம்போங் பக்கார் பத்து கிராமத்துவாசிகளின் துயர் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதிருக்கும் மந்திரி புசார் முகம்மட் காலிட் நோர்டினைச் சாடினார்.
அந்தக் கிராமத்து மக்கள் அவர்கள் குடியிருப்பதாகக் கூறப்படும் அரசு நிலத்தைக் காலி செய்ய வேண்டுமென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிக்கையை எதிர்த்து மகஜர் கொடுப்பதற்காக நேற்று காலிட்டின் அலுவலகத்துக்கு வெளியில் கூடியதாக சலாஹுடின் ஓர் அறிக்கையில் கூறினார்.
அவர்களுடன் டிஏபி பெங்காலான் ரிந்திங் சட்டமன்ற உறுப்பினர் சியோ ஈ ஹவ்-வும் சென்றிருந்தார். ஆனால், அவர்கள் அங்கு கூடுவதைப் பாதுகாவலர்கள் தடுத்தனர்.
“அவர்கள் அங்கு ஒன்றுகூடுவதைத் தடுக்குமாறு பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்ட சில தலைவர்களின் செயல் வருத்தமளிக்கிறது.
“சட்டமன்றம் மக்களுக்குச் சொந்தமானது. மக்களின், கம்போங் பக்கார் பத்து குடியிருப்பாளர்கள் போன்றோரின் குரலைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும், ஒதுக்கித் தள்ளக்கூடாது”, என்றாரவர்.