ஏஜி குறித்த காணொளிக்காக மலேசியாகினி சிஇஓமீது வழக்கு

ceoகினிடிவி   இணையத்தளத்தில்   மனதைப் புண்படுத்தும்     காணொளி   ஒன்றைப்   பதிவேற்றம்    செய்தார்   என்று  மலேசியாகினி   தலைமை     செயல்   அதிகாரி   பிரமேஷ்   சந்திரன்மீது    கோலாலும்பூர்   சைபர்    நீதிமன்றத்தில்  இன்று   குற்றஞ்சாட்டப்பட்டது.

மலேசியாகினியின்  தலைமைச்   செய்தியாசிரியர்   ஸ்டீபன்   கான்மீதும்   கடந்த    ஆண்டு    நவம்பரில்     இதேபோன்று   குற்றஞ்சாட்டப்பட்டது   குறிப்பிடத்தக்கது.

அது  முன்னாள்   பத்து   கவான்   அம்னோ    தொகுதி   உதவித்   தலைவர்   கைருடின்   அபு  ஹசான்     கடந்த    ஆண்டு    ஜூலையில்    நடத்திய   செய்தியாளர்    கூட்டத்தைக்   காண்பிக்கும்   ஒரு    காணொளி.   அது,   “கைருடின்:   அபாண்டி   அலி   ஏஜி- ஆக   இருக்கத்    தகுதியற்றவர்.  உடனே  உடனே    விலக   வேண்டும்”  என்று   தலைப்பிடப்பட்டு    பதிவேற்றம்    செய்யப்பட்டிருந்தது.

காணொளி   ஜூலை   27-இல்   கினிடிவி-இன்   ஆங்கிலம்,  மலாய்ப்   பகுதி    இரண்டிலும்     வெளிவந்தது.

பிரமேஷ்   சந்திரனை  விடுவிக்க    ரிம10,000   பிணைப்பணம்    கொடுக்க    வேண்டும்   என்று   நிபந்தனை  விதிக்குமாறு   மலேசிய   தொடர்பு,  பல்லூடக   ஆணையத்தின்   தலைமை    வழக்குரைஞர்    கேட்டுக்கொண்டார்.  அத்துடன்   அவரது  கடப்பிதழையும்    ஒப்படைக்க    வேண்டும்    என   நீதிமன்றம்   உத்தரவிட     வேண்டும்    என்றார்.

ஆனால்,  நீதிபதி    சொந்த   உத்தரவாதமே   போதும்     என்றும்   கடப்பிதழை    சரண்   செய்ய  வேண்டியதில்லை  என்றும்   கூறி     பிரமேஷ்   சந்திரனை   விடுவித்தார்.