“எஸ்ஆர்சி பணம் ரிம்10.02 மில்லியன்” அம்னோவும் பிஎன்னும் நஜிப்பிடமிருந்து பெற்றன, ரஃபிஸி கூறுகிறார்

 

expoஅம்னோவும் பிஎன்னும் மொத்தம் ரிம10.02 மில்லியனை பிரதமர் நஜிப்பிடமிருந்து பெற்றன என்று பிகேஆர் உதவி தலைவர் ரஃபிஸி ரமலி கூறுகின்றார்.

இப்பணம் 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேசனல் பெர்ஹாட்டிடமிருந்து வந்ததாக அவர் மேலும் கூறினார்.

எஸ்ஆர்சியை நஜிப்பின் தலைமையிலான நிதி அமைச்சு 2012 ஆம் ஆண்டில் எடுத்துக்கொண்டது. இந்த நடவடிக்கைகள் ஜூலை 22, 2014 க்கும் மார்ச் 3, 2015 க்கும் இடையில் நடைபெற்றன.

இந்த நடவடிக்கையின் மூலம் பலனடைந்தவர்களின் பெயரை வெளியிட்டதுடன் அவர்கள் பெற்ற பணத்தை எஸ்ஆர்சியிடம் திருப்பி ஒப்படைக்கும்படியும் ரஃபிஸி கேட்டுக்கொண்டார்.

பலனடைந்தவர்களின் பட்டியல்:

பண்டார் துன் ரசாக் பிஎன் (ஜூலை 22, 2014) – ரிம170,000
அம்னோ தலைமையகம் (ஜூலை 22, 2014) – ரிம1.5 மில்லியன்
பினாங்கு அம்னோ (ஜூலை 24, 2014) – ரிம1 மில்லியன்
அம்னோ தலைமையகம் (ஆகஸ்ட் 26, 2014) – ரிம5 மில்லியன்
சாபா பிஎன்-அப்கோ (பெப்ரவரி 17, 2015) – ரிம1 மில்லியன்
பாடாங் செராய் அம்னோ தலைவர் அஸ்மாடி தாலிப் (பெப்ரவரி 17, 2015) – ரிம50,000
பினாங்கு அம்னோ (பெப்ரவரி 26, 2015) – ரிம1 மில்லியன்
ஜோகூர் பாரு அம்னோ (மார்ச் 3, 2015) – ரிம300,000.

கடந்த மே 3 இல், ரஃபிஸி இதே அடிப்படையில் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். அதில் பல ஊடகங்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள், பிரதமரின் உதவியாளர் ஒருவர் உட்பட, எஸ்ஆர்சி பணத்தை நஜிப்பிடமிருந்து பெற்றுள்ளனர்.

பணம் பெற்றவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த 30 க்கு மேற்பட்டவர்களில் இத்தாலியைச் சேர்ந்த நகைக்கடை டி கிரிசொகொநோ அடங்கும். அது 2014 ஆம் ஆண்டில் 10 தடவைகளில் பெற்ற பணத்தின் மொத்தம் 763,500 யூரோஸ் ஆகும் (தற்போதைய மதிப்பு ரிம3, 595, 916. 53).

பின்னர் தொடர்பு கொண்டபோது, பாடாங் செராய் அம்னோ தலைவர் அஸ்மாடி, ரஃபிஸியின் இப்புதியக் குற்றச்சாட்டை மறுத்தார்.

பினாங்கில் அம்னோ தலைமையிலான எதிர்க்கட்சியின் தலைவர் ஜஹாரா ஹமிடியும் மறுத்தார்.

அப்கோ தலைவர் மார்கஸ் மோஜிகோ பிரதமரிடமிருந்து பணம் பெற்றதை மறுத்தார். ஆனால், கட்சிகள் நிதி பெறுவது “வழக்கமானது” என்றாரவர்.

பணம் பெற்றதாக கூறப்பட்டிருப்பவர்களைத் தொடர்புகொள்ள மலேசியாகினி முயன்று வருகிறது.

2014 ஆம் ஆண்டில், எஸ்ஆர்சியிடமிருந்து நஜிப் ரிம74 மில்லியன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.