உயர்நிலையில் எல்லாம் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நடப்பதை உறுதிப்படுத்த பிரதமரும் அமைச்சர்களும் துறைத் தலைவர்களும் தங்கள் சொத்து விவரங்களை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்திடம் அறிவிக்க வேண்டும் என்கிறது ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல்- மலேசியா(டிஐ-எம்).
எம்ஏசிசி தலைவர் அவருடைய சொத்து விவரங்களை நாடாளுமன்றத்திடம் அறிவிக்க வேண்டும் என டிஐ-எம் தலைவர் அக்பார் சத்தார் கூறினார்.
இது ஒரு பூர்வாங்க நடவடிக்கைதான். முடிவில் அவர்கள் அனவருமே சொத்து விவரங்களை இணையத்தில் பகிரங்கமாக அறிவித்தாக வேண்டும் என்றார் அக்பார்.
“இதில் அபாயம் ஏதுமில்லை. ஒவ்வோர் ஆண்டும் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலை (அவர்களின் சொத்து மதிப்பையும்) ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றனவே”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
அமைச்சர்கள், துறைத் தலைவர்களின் சொத்து விவரங்கள் பொதுவில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே பல தடவை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், அப்படிச் செய்வது நல்லதல்ல, அவர்களின் குடும்பத்தார் பிணைப்பணத்துக்காகக் கடத்தப்படும் அபாயம் நேரலாம் என்று கூறப்பட்டு வந்தது.