அம்னோவும் பாஸும் ஒன்றிணையட்டும் அதுதான் பக்கத்தான் ஹராபானுக்கு நல்லது என்கிறார் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின். அப்போதுதான் பக்கத்தானால் கூடுதல் இடங்களை வெல்ல முடியுமாம்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹராபான் மும்முனைப் போட்டியை எதிர்நோக்க வேண்டியிருக்காது.
“அவர்கள் அம்னோவுடன் இணைவது நல்லதுதான். அதன்பின் நேரடிப் போட்டிதான். அதில் நாங்கள் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம். எது எப்படியோ வெற்றிபெறும் நோக்கில்தான் வியூகங்களை வகுப்போம்”, என்று முகைதின் கெடாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
அம்னோவுடன் கைகோக்க விரும்பும் பாஸை பெர்சத்து தலைவர் கண்டித்தார்.
“(பாஸ்) நெடுகிலும் அம்னோவையும் பிஎன்னையும் எதிர்த்தே வந்துள்ளதை நாம் அறிவோம்…..அம்னோவில் ஊழலும் அதிகாரமீறலும் நிறைந்துள்ளதை எடுத்து விளக்கினோம்.
“ஆனாலும் பாஸ் (அம்னோவுடன்) ஒத்துழைக்க விரும்புவது வியப்பளிக்கிறது”, என்று முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோ துணைத் தலைவருமான முகைதின் கூறினார்.