எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்தின் பணம் எங்கெங்கெல்லாம் சென்றது என்பதை அம்பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி, அதில் ரிம2.6 மில்லியன் சில ஊடக நிறுவனங்களுக்குச் சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்வதற்காகக் கொடுக்கப்பட்டது என்றார்.
அப்படிப் பணம் பெற்ற நிறுவனங்களில் ஒன்று 2014, ஜூலை 22-இல் ரிம 1மில்லியனைப் பெற்றது. இது எஸ்ஆர்சி-இன் பணம். அதாவது எஸ் ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வங்கிக் கணக்குக்குச் சென்ற பணத்தின் ஒரு பகுதி என்று ரபிசி குறிப்பிட்டார்.
பணம் பெற்ற அந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக சமூக வலைத்தளங்களில் பிரச்சார வேலைகளைச் செய்யும் ஒரு நிறுவனமாம்.
அந்நிறுவனத்துக்கும் தித்திவங்சா அம்னோ உறுப்பினர் நோர்யுஸ்மிசா நாசிருக்கும் தொடர்புண்டு என்று ரபிசி தெரிவித்தார்.
நோர்யுஸ்மிசாவின் படத்தைத் தம் வலைப்பதிவில் வெளியிட்ட ரபிசி தம்முடைய பத்திரிகை அறிக்கையிலும் அதை இணைத்திருந்தார்.
நோர்யுஸ்மிசாவின் கருத்தை அறிய அவரைத் தொடர்புகொண்டபோது குற்றச்சாட்டுகளைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
தான் பணிபுரிந்த நிறுவனம் நஜிப்பிடமிருந்தோ எஸ்ஆர்சி-இடமிருந்தோ பணம் பெற்றது தனக்குத் தெரியாது என்றார்.
“எனக்கு (பண விவகாரம் குறித்து) எதுவும் தெரியாது….நான் அந்நிறுவனத்தில் ஓர் ஆலோசகனாக மட்டுமே பணியாற்றினேன்.
“எனக்கு நிறைய கடனிருக்கிறது. ரிம 1மில்லியன் இருந்தால் என்னுடைய பல பிரச்னைகள் தீர்ந்து விடும்…….என்னைக் குற்றச்செயலில் தொடர்புப்படுத்துவது ஏன் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை”, என நோர்யுஸ்மிசா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அந்நிறுவனத்தில் ஓர் ஒப்பந்த ஊழியராகத்தான் பணி புரிந்ததாக தெரிவித்த அந்த 45-வயது ஆடவர், தாம் அறிந்துவரை இப்போது அந்நிறுவனமும் இல்லை என்றார்.
தித்திவங்சா அம்னோவைப் பொறுத்தவரை தான் ஒரு சராசரி உறுப்பினன் மட்டுமே என்றார்.
குற்றம்சாட்டும் ரபிசிமீது வழக்கு தொடுக்கும் எண்ணம் உண்டா என்று வினவியதற்கு, “நான் ஒரு சாமானியன். முக்கியமானவனல்ல, அரசியல்வாதியும் அல்ல. ரபிசி என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். என்னிடம் வசதி இல்லை (வழக்கு தொடுக்க)”, என்றார்.