டேவிட் தியோவைத் தாக்கியதற்காக நகைச்சுவைக் கலைஞர் மாட் ஓவர் வருத்தப்படவில்லை

comedianநேற்றிரவு   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   முன்னிலையில்   இயக்குனர்   டேவிட்   தியோவைத்    தாக்கியதற்காக   நகைச்சுவைக்  கலைஞர்   சுலைமான்  யாசின்   வருத்தப்படவில்லை.

தியோவுக்கு  “மரியாதை” கற்றுத்தரத்தான்   அப்படிச்   செய்ததாக   மாட்   ஓவர்   என்ற   பெயரில்  பிரபலமாக    விளங்கும்    அந்த   நகைச்சுவைக்  கலைஞர்    சொன்னதாக    மலாய்   நாளேடான    ஹரியான்   மெட்ரோ  கூறியது.

ஸ்ரீ பெர்டானாவில்     நடந்த   தேசிய   உருமாற்றம்(டிஎன்50) மீதான  ஒரு  கருத்தரங்கில்   தியோ,   பிரதமரையும்   நிகழ்ச்சி நெறியாளராக    செயல்பட்டுக்   கொண்டிருந்த   ரோஸ்யாம்   நோரையும்    அவமதிக்கும்   வகையில்    நடந்து   கொண்டாராம்.

நிகழ்ச்சி    நடந்து   கொண்டிருந்தபோது   மேடை  நோக்கிச்   சென்ற   தியோ  அங்கு   எல்லாருக்குமே   சம   வாய்ப்பு   கொடுக்கப்படவில்லை   என்று   நிகழ்ச்சி   நெறியாளர்   ரோஸ்யாமிடம்     முறையிட்டிருக்கிறார்.

பிரதமரை    “அவமதிக்கும்    வகையில்  நடந்துகொள்வதாக”    தியோவைக்   கடிந்துகொண்ட   ரோஸ்யாம்   தொடர்ந்து  தியோவுக்கும்    அவருடைய   கருத்தைச்   சொல்ல   அனுமதியும்   கொடுத்தார்,  தியோ   ஒரு  கவிதை   படிக்கத்   தொடங்கினார்.

அப்போதுதான்   அது    நடந்தது.    தியோவை   நோக்கிச்    சென்ற   சுலைமான்    ஓங்கி   அவரை    அறைந்தார்.  அறை  தியோவின்   இடது   கையில்   விழுந்தது.  பதிலுக்கு   தியோ  சுலைமானை    எட்டி   உதைத்தார்.  சிறிது  நேரம்    இருவருக்குமிடையில்   தள்ளுமுள்ளு   நிகழ்ந்தது.   உடனே   பாதுகாவலர்கள்   இடையில்   புகுந்து   இருவரையும்   கட்டுப்படுத்தி   அங்கிருந்து   அழைத்துச்   சென்றனர்.  அதன்பின்னர்   நிகழ்வு   சுமூகமாக   தொடர்ந்தது.

எல்லாவற்றையும்   பார்த்துக்கொண்டு   அமைதியாக    இருந்த   நஜிப்,  அதன்பின்னர்   தியோ,     சுலைமான்     ஆகிய   இருவரையும்   அரங்குக்கு   அழைத்து   வரச்   சொல்லி   இருவரையும்  கைகுலுக்க    வைத்து    சமாதானப்படுத்தி    வைத்தார்.

சம்பவத்தால்    அதிர்ச்சிடைந்ததாக   கூறிய   தியோ,    சுலைமானைத்    தமக்குத்     தெரியாது    என்றார்.

“திடீரென   ஓடிவந்து     அறைந்தார்.  நான்   ரோஸ்யாமிடம்  என்ன   கேட்டேன்,    முன்வரிசையில்   இருப்பவர்களை   மட்டுமே   பேச    அழைக்காமல்    எல்லாருக்கும்   வாய்ப்பு    கொடுங்கள்   என்றேன்.  நானும்  பிரதமரிடம்   சில   கேல்விகள்   கேட்க    விரும்பினேன்”,  என   தியோ   கூறியதாக   நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்    தெரிவித்திருந்தது.

தியோ,  இவ்விவகாரத்தை   முடிந்து    போன  ஒன்றாகத்தான்   நினைக்கிறார்.  தம்மைத்  தாக்கியவர்மீது   வழக்கு   தொடுக்கும்    எண்ணமெல்லாம்   அவருக்கு  இல்லை.