கைருடின்: உயர் அதிகாரிகளைக் கைது செய்த எம்ஏசிசிக்குப் பாராட்டுகள் ஆனாலும்……

complainமலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்    அண்மைக்காலமாக   உயர்   அதிகாரிகள்   பலரைக்   கைது     செய்து    பாராட்டத்தக்க  வகையில்   செயல்பட்டு    வந்துள்ளது    என்றாலும்   1எம்டிபிமீது     நடவடிக்கை     எடுக்காதவரை    அது   நம்பத்தக்கதுதானா    என்ற   சந்தேகம்    ஒரு   பக்கம்    இருக்கவே    செய்யும்   என்கிறார்   கைருடின்    அபு  ஹசான்.

“ஊழலை  எதிர்ப்பதில்   தீவிரம்   காட்டும்   எம்ஏசிசி   தலைவருக்குப்   பாராட்டுகள்.

“ஊழலுக்கு   எதிராக   ஆணையம்    கொண்டுள்ள   கடுமையான   நிலைப்பாட்டை   ஆதரிக்கிறேன்,   அதே  வேளையில்   2014-இலிருந்து    ஆணையத்தில்     நான்    பல    புகார்களைச்   செய்துள்ளேன்.  அவை    எல்லாம்    என்னவாயின,   சுல்கிப்ளி  விளக்குவாரா?”,  என   அம்னோ   பத்து  கவான்  தொகுதி   முன்னாள்   தலைவர்   ஓர்    அறிக்கையில்   வினவினார்.

ஊழலுக்கு  எதிரான   போராட்டத்தில்   அரசியல்    அழுத்தத்துக்கு   இடமளிக்கக்  கூடாது   என்று   கைருடின்   வலியுறுத்தினார்.

“1எம்டிபி   தொடர்பான   ஊழல்கள்,     அதிகாரமீறல்கள்   குறித்தும்   அவற்றில்   பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்,   அவரின்   துணைவியார்    ரோஸ்மா    மன்சூர்,   ஜோ   லவ்,    அருள் கந்தா  கந்தசாமி,   1எம்டிபி     வாரிய   இயக்குனர்கள்   ஆகியோருக்கு   தொடர்பிருப்பது   குறித்தும்   பல   புகார்களைச்    செய்துள்ளேன்.

“இதுவரையிலும்,  கடந்த   மூன்றாண்டுகளாக   நான்   செய்துள்ள    புகார்கள்மீது   என்ன   நடவடிக்கை     எடுக்கப்பட்டது    என்ற    தகவல்    எனக்குச்    சொல்லப்படவே  இல்லை.

“சிங்கப்பூர்,  அமெரிக்கா   போன்ற     நாடுகளிலும்     இதே  போன்று   புகார்கள்    செய்தேன்.   அங்கு   1எம்டிபியுடன்   தொடர்புள்ளவர்கள்   கைது   செய்யப்பட்டார்கள்,  அவர்கள்மீது   வழக்கு    தொடுக்கப்பட்டது”,   என்று  கைருடின்  சுட்டிக்காட்டினார்.

“நான்  என்னுடைய    புகார்க்ளில்   குறிப்பிட்டிருக்கும்     அனைவர்மீதும்    டத்தோ   சுல்கிப்ளி    நடவடிக்கை     எடுப்பார்     என்று    நம்புகிறேன்.

“1எம்டிபி   ஊழலில்    சம்பந்தப்பட்டவர்கள்   கைது    செய்யப்பட்டு    நீதிமன்றத்தில்    நிறுத்தப்பட்டு    சிறையிடப்பட்டால்   மட்டுமே    ஆணையத்தின்   நற்பெயர்    பாதுகாக்கப்படும்.  நாம்   அஞ்ச   வேண்டியது   இறைவனுக்கு   மட்டுமே,     மனிதருக்கு   அல்ல”,  என  கைருடின்   கூறினார்.