தம் நெருக்கமான நண்பர்களுக்கு உள்நாட்டு வருமான வாரியம் (ஐஆர்பி) நெருக்குதல் கொடுப்பதாக கூறுகிறார் டாக்டர் மகாதிர் முகம்மட்.
மகாதிர் பிரதமராக இருந்தபோது பல கோடீஸ்வரர்கள் அவருக்கு நெருக்கமாகவும் ஆதரவாகவும் இருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் மகாதிரின் அல்லக்கைகள் என்றும் மகாதிர் அரசாங்கத்தில் குத்தகைகளைப் பெற்று பயனடைந்தவர்கள் என்றும் விமர்சிப்போரும் உண்டு.
நேற்றிரவு செலாயாங்கில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மகாதிர் பக்கத்தான் ஹராபானுக்கு நன்கொடை அளிப்போரை ஐஆர்பி குறிவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.
“அவர்கள் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடைகள் கிடைப்பதையும் நிதியுதவி கிடைப்பதையும் தடுக்கிறார்கள்.
“ரிம40,0000 என்றால்கூட விடுவதில்லை. ‘இது எதற்கு?’ என்று கேட்கிறார்கள். ஹராபானுக்கு என்றால் அவர்களின் கணக்குகள் தோண்டித் துருவி ஆராயப்படும். ஐஆர்பி தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்”, என்றாரவர்.
யாரெல்லாம் அப்படிப்பட்ட தொல்லைகளுக்கு ஆளானார்கள் என்பதை மகாதிர் குறிப்பிடவில்லை ஆனால், மகாதிருக்கு நெருக்கானவர்கள் என்று அறியப்பட்ட இருவர் ஐஆர்பி தொல்லைகளை எதிர்நோக்கியதாக செய்திகள் வந்துள்ளன.
எம்கே லேண்ட் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட், 2009, 2011, 2013 ஆண்டுகளுக்கு ரிம80.77 மில்லியன் வரிக்கட்டணம் செலுத்தக் கூறி அறிவிக்கை வந்துள்ளதாக நேற்று தெரிவித்தது.
அந்நிறுவனம், வருமான வரி வாரியம் வரியை மதிப்பிடும் முறை ஏற்புடையது அல்ல என்று கூறி அதற்கு எதிராக முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இதனிடையே கண்ட்ரி ஹைட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் செயல்முறை தலைவரும் அதில் மிகப் பெரிய பங்குதாரருமான லீ கிம் இயு-வுக்கு வெளிநாட்டு வங்கி ஒன்றில் இருந்த சொத்துக்களை ஐஆர்பி இம்மாதத் தொடக்கத்தில் முடக்கி வைத்தது.
அந்நிறுவனத்தின் துணை நிறுவனமொன்று 1997, 1998 ஆம் ஆண்டுகளுக்கு வரியாக செலுத்த வேண்டிய ரிம22.5 மில்லியனுக்காக ஐஆர்பி அவ்வாறு செய்துள்ளதாக கண்ட்ரி ஹைட்ஸ் ஹோல்டிங்ஸ் கூறிற்று.
மகாதிருக்கு நெருக்கமான இன்னும் பலரின் கணக்குகள் துருவித் துருவி ஆராயப்படுவதாக தெரிகிறது. ஆனால், அவை பற்றிய செய்திகள் வெளிவரவில்லை.