சீனக் கம்யூனிச கட்சியுடன் (சிபிசி) தொடர்பு கொண்டிருக்கும் அம்னோ மற்றும் மசீச பற்றிய தமது கவலை குறித்து போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்காருக்கு நாளை ஒரு கடிதம் எழுதப் போவதாக பெர்காசா தலைவர் கூறுகிறார்..
சீனக் கம்யூனிச கட்சியுடன் அம்னோவும் மசீசவும் கொண்டிருக்கும் ஒத்துழைப்பு நாட்டில் கம்யூனிசம் பரவுவதற்கு வகை செய்யும் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறுகிறார்.
“நாங்கள் வாயடைத்துப்போய் இருக்கிறோம் ஏனென்றால் கம்யூனிச தத்துவத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் சிபிசி அம்னோவுடன் வேலை செய்கிறது.
“நாம் மலேசியாவில் கம்யூனிசத்தை நீண்ட காலத்திற்கு எதிர்கொண்டுள்ளோம், பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.
“கம்யூனிச தத்துவம் பரவும், அதனால் நாட்டிற்கு ஆபத்து விளையும் சாத்தியத்தை பெர்காசா நிராகரிக்கவில்லை” என்று கோலாலம்பூரில் இன்று ஒரு செதியாளர் கூட்டத்தில் இப்ராகிம் கூறினார்.
2010, ஆகஸ்ட்டில், அம்னோவும் சிபிசியும் ஓர் இளைஞர் தலைமைத்துவ பரிமாற்று திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இப்போது, மசீச சிபிசியுடன் கல்வி, கலாச்சாரம், நிபுணத்துவங்கள், வியூகங்கள் மற்றும் கிராம மேம்பாடு போன்றவற்றில் ஒத்துழைப்பதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
இது கம்யூனிசத்தை விதைப்பதோடல்லாமல் மிக ஆபத்தான இதர அமைப்புகளுடன் ஒத்துழைப்பதற்கு இட்டுச் செல்லும், ஏனென்றால் அவ்வாறான அமைப்புகள் சிபிசியுடன் ஒத்துழைக்கின்றன என்று இப்ராகிம் அலி மேலும் கூறினார்.
இன்னொரு விவகாரம் குறித்து பேசிய இப்ராகிம், அன்வார் பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் என்றார்.
இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி போக்கு தர்மசங்கடமான நிலையை உண்டுபண்ணுகிறது என்றார் இப்ராகிம் அலி.