பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா உதவித் தலைவர் ஹமிடா ஒத்மான் பேராக்கில் கட்சிக்குள் உள்பூசல் நிலவுகிறது என்றார்.
பேராக் மாநில ஆட்சிக்குழு முன்னாள் உறுப்பினரான அவர், கட்சியில் அணிகளுக்குள் நடக்கும் பதவிப் போராட்டம்தான் பிரச்னைக்குக் காரணம் என்றார்.
“உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கட்சியில் உள்பூசல். அதுதான் பிரச்னை. வேண்டியவர் வேண்டாதவர் என்று பாரபட்சம் காட்டுவதுதான் இதற்குக் காரணம்.
“எடுத்துக்காட்டுக்கு கட்சித் தலைவர் மன்றம் தொகுதித் தலைவராக ஒருவரைப் பரிந்துரைக்க வேறு ஒருவர் தலைவராக அறிவிக்கப்படுகிறார். அப்போது பதவிப் பிரச்னை கெளரவ பிரச்னையாக மாறுகிறது. ஒருவரின் பெயரைச் சொல்லும்போது இன்னொருவர் பெயர் அறிவிக்கப்படுகிறது.
“மாநிலக் கட்சித் தலைவரின் ஆலோசனையின்படி பெயர் மாற்றம் நடந்துள்ளது. இதுதான் பிரச்னைக்குக் காரணம்”, என ஹமிடா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இப்பிரச்னைக்குத் தம்மால் தீர்வு காண முடியாது. கட்சியின் நிர்வாகத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் கட்சியின் மத்திய தலைமையும்தான் இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றாரவர்.