முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு சவூதி அரச குடும்பத்தார் வழங்கியதாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியன் நன்கொடையிலிருந்து தாம் பணம் பெற்றதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
அவரும் முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டாலும் சர்ச்சைக்குரிய ரிம2.6 பில்லியனிலிருந்து கணிசமான தொகையைப் பெற்றிருப்பதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீஸ் நேற்று கூறியிருந்தார்.
அவரது கூற்றை ஷாபி அப்டாலும் நேற்று மறுத்திருந்தார்.
“இது வீண் பழி, அல்லாவின் பெயரால், நான் ஒற்றைக் காசுகூட பெற்றதில்லை”, என நேற்றிரவு கோலாலும்பூரில் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கூட்டமொன்றில் முகைதின் கூறினார்.
“அவர் (நஸ்ரி) அம்னோ நிதி பெற்றதாகக் கூறியுள்ளார். அது நிச்சயமாக என் பாக்கட்டுக்குள் செல்லவில்லை”, என்றார்.