மலேசிய உழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எத்தனையோ பேரைக் கைது செய்திருந்தாலும் அது ஓர் அரசியல் கருவி என்ற அவப்பெயரைப் போக்கிக் கொள்ள முடியவில்லை என்கிறார் டிஏபி எம்பி டோனி புவா. இதற்குக் காரணம், அது 1எம்டிபி, எஸ்ஆர்சி ஊழல்கள்மீது நடவடிக்கை எடுக்காமலிருப்பதுதான்.
“எம்ஏசிசி, நாடு முழுக்க பயனீட்டுத் துறை அதிகாரிகள், ஜக்காத் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என ஊழல் செய்த டஜன் கணக்கான அரசு அதிகாரிகளைத் துணிச்சலாகக் கைது செய்துள்ளது.
“ஆனால், அது இத்தனை செய்தும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தின் அரசியல் கைப்பாவை என்ற அவப்பெயரிலிருந்து களங்கத்திலிருந்து அதனால் மீண்டு வர முடியவில்லை. ஏனென்றால், மலேசியாவின் ஆகப் பெரிய ஊழல்களான 1எம்டிபி, எஸ்ஆர்சி ஊழல்கள்மீது அது கைவைக்கத் தவறிவிட்டது”, என புவா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்நிலையை சிங்கப்பூருடன் ஒப்பிட்ட புவா, சிங்கை அதிகாரிகள் சிங்கப்பூர் வங்கிகள் மூலமாக பணச் சலவை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர்களைப் பிடித்து, குற்றஞ்சாட்டி, தண்டனை பெற்றுக்கொடுத்ததையும் , அத்தனையும் ஒரே ஆண்டில் நடந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.