புத்ரா ஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்தின் வாசல் கதவுகள் சங்கிலியால் பூட்டப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டது.
தேர்தல் பதிவேடுகளின் வரைவு நகல்களை அரசியல் கட்சிகளுக்கு கொடுப்பதில்லை என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்க்கும் ஆட்சேப மனுவை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் மௌனமாக இருந்து வருவது கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் இது வரையில் மௌனமாக இருப்பது தேர்தல் ஆணையம் அரசாங்கத்தால் ஆட்டிப்படைக்கப்படும் ஓர் ஆமாம்-சாமி அமைப்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பதைக் காட்டுகிறது என்று அமனாவின் இளைஞர் பிரிவு தேர்தல் இயக்குனர் முகமட் தாக்குய்டின் சீமான் கூறினார்.
தகவல் அளிக்க தேர்தல் ஆணையம் ஏன் மறுக்கிறது என்பதுதான் கேள்வி என்று கூறிய அவர், “தேர்தல் ஆணையத்திற்கு தூய்மையான தேர்தல் வேண்டாமா?”, என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.
நாடு தழுவிய அளவில், அமனா இளைஞர் இது குறித்து போலீஸ் புகார் செய்வர். அது நாளையிலிருந்து தொடங்கும் என்றாரவர்.