பக்கத்தான் ஹரப்பான் ஜூன் 11 இல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள தேசிய அளவிலான புக்கா புவாசா நிகழ்ச்சியில் பினாங்கு முதலமைச்சர் பங்கேற்கிறார். இதை லிம் குவான் எங் உறுதிப்படுத்தியுள்ளார் என்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியான் கூறுகிறார்.
இந்த தேசிய அளவிலான நிகழ்ச்சி பினாங்கில் நடத்தப்படும். அந்நிகழ்ச்சியில் பக்கத்தானின் உயர்மட்ட தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில், அமனா தலைவர் முகமட் சாபு மற்றும் பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் ஆகியோரும் அடங்குவர்.
இது போன்ற நிகழ்ச்சிகள் ஜோகூர் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் நடத்தப்படும். முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றாரவர்.
இது பக்கத்தான் ஹரப்பான் எப்படி வேறுபட்ட இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்க முயற்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று சைபுடின் இன்று பினாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பாஸ் ஆதரவு அரசு சார்பற்ற அமைப்பான ஜாரிங்கான் முஸ்லிமின் புலாவ் பினாங் (ஜெஎம்பிபி) மற்றும் அதன் தலைவர் ஹஃபிஸி நோர்டின் புக்கா புவாசா நிகழ்ச்சியில் லிம் கலந்துகொள்வதற்கு தடை விதிக்க வேண்டும், ஏனென்றால் லிம் குவான் எங் இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று கூறியிருந்ததை சைபுடின் குறிப்பிட்டார்.
“அவர்கள் செய்திருப்பது (புக்கா புவாசா நிகழ்ச்சிகளில் லிம்மிற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருப்பது) முற்றிலும் இஸ்லாத்திற்கு எதிரானது; நம்முடைய சமயம் மிக தெளிவானது, ஆனால் அதில் நம்பிக்கையுடைய சிலர் சில பிரச்சனைகளால் ஆட்கொள்ளப்பட்டு மற்றவர்களை குழப்ப முயல்கின்றனர்”, என்றார் சைபுடின்.
2008 ஆம் ஆண்டில் பினாங்கு மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து டிஎபி நிருவாகம் இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைப் பேணியுள்ளது என்று லிம்மின் வியூக ஆலோசகருமான ஸைபுடின் மேலும் கூறினார்.
அதே செய்தியாளர் கூட்டத்தில், பேராக் மாநில முன்னாள் மந்திரி புசார் (பாஸ்) நிஸார் ஜமாலுடின் ரமதான் காலத்தில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் லிம்மின் நல்லெண்ண செயல்களைப் பாராட்டினார்.
தேர்தல் காலங்களில் அலிபாபா கூட்டத்தினர்தான் (பாரிசான்) வேஷம் போடுவதில் வல்லவர்கள் என்றால், இந்த சிவாஜி கணேசன் கூட்டத்தினர் (எதிர்க்கட்சியினர்) வேஷம் போடுவதில் அந்த அலிபாபா திருடர்களையும் மிஞ்சிவிடுவார்கள் போல் தெரிகிறது.
ஒரு முஸ்லீம் நாடான பங்களாதேஷ் ஷாக்கீர் Naik தீவிரவாதி என்கிறது, நாங்களும் முஸ்லீம் நாடுதான் என்று கூறும் மலேசியா ஷாக்கீர் Naik மத போதகர் என அரவணைத்து கொள்கிறது.
இந்த விவகாரத்தில் எந்த நாடு இஸ்லாத்திற்கு எதிரானது என்று விடை தெரியாமல் உலக முஸ்லீம்கள் தலை மயிரை பிய்த்து கொள்கிறார்கள்.
ஜாரிங்கான் முஸ்லிமின் புலாவ் பினாங் (ஜெஎம்பிபி) லிம் குவான் எங் இஸ்லாத்திற்கு எதிரானவர் என மொட்டையா கூறினால் எப்படி ?