வாக்காளர்கள் சிலாங்கூருக்கும் பினாங்குக்கும் குடிபெயரும் போக்கு தென்படுகிறது

dapகடந்த   ஐந்தாண்டுகளில்   மிக  உயர்ந்த   நிகர   குடிநுழைவு   விகிதம்   சிலாங்கூரிலும்   பினாங்கிலும்   பதிவாகியுள்ளதை    டிஏபி   எம்பி   ஒருவர்   கவனப்படுத்துகிறார்.

2015- 2016இல்   சிலாங்கூரில்  நிகர  குடிநுழைவு   விகிதம்    19,400  ஆகவும்   பினாங்கில்   12,000  ஆகவும்    இருந்தது    என   செர்டாங்   எம்பி    ஒங்   கியான்  மிங்   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

ஒரு   இடத்துக்குள்     குடிநுழைவோர்     எண்ணிக்கையிலிருந்து    அவ்விடத்திலிருந்து  வேறு   இடங்களுக்குக்    குடியேறுவோர்    எண்ணிக்கையைக்    கழித்தால்   கிடைப்பதுதான்   குடிநுழைவு   விகிதம் .

ஒங், வெள்ளிக்கிழமை   வெளியிடப்பட்ட   புள்ளிவிவரத்துறை    அறிக்கையைச்  சுட்டிக்காட்டினார்.

“2011க்கும்   2016க்குமிடைப்பட்ட    புள்ளிவரங்களின்படி   (அந்த  ஐந்தாண்டுகளில்)   சிலாங்கூரில்   125,400  பேரும்  பினாங்கில்   49,800   பேரும்  குடியேறியுள்ளனர்.   அந்த   வகையில்    சிலாங்கூரும்   பினாங்கும்தான்    மக்கள்    அதிகம்   விரும்பிக்  குடியேறும்    முதலிரு   மாநிலங்களாகும்”,  என  பினாங்கு   கழகச்  சிந்தனைக்குழுவின்   கோலாலும்பூர்  கிளை   மேலாளருமான  ஒங்   கூறினார்.

“அது,   பக்கத்தான்   ஹராபான்   கீழுள்ள   அவ்விரு   மாநிலங்கள்மீதும்    மலேசியர்கள்   மிகுந்த   நம்பிக்கை   கொண்டிருப்பதைக்   காண்பிக்கிறது”,  என்றாரவர்.
அதே  வேளையில்,   மக்கள்   அதிக   அளவில்   வெளியேறிய   மாநிலங்கள்    என்றால்    அவை    கோலாலும்பூர்  கூட்டரசுப்   பிரதேசமும்    பேராக்குமாகும்.
2009-இலிருந்து   2016வரை   கோலாலும்பூரிலிருந்து       163,400  பேரும்   பேராக்கிலிருந்து   40,000   பேரும்   வெளியேறியுள்ளனர்.

பேராக்கில்  உள்ளவர்கள்   மேம்பட்ட   வாழ்க்கை   வசதிகளைத்   தேடி   மற்ற   இடங்களுக்குச்   செல்லும்   வேளையில்   கோலாலும்பூரில்  வீட்டு  விலை   அங்குள்ளவர்களை  விரட்டி  அடிக்கிறது   என்கிறார்   ஒங்.

“இதே  போக்கு   தொடருமானால்   கோலாலும்பூர்,   பெரும்பாலும்   பணக்காரர்களையும்    வெளிநாட்டவர்களையும்   அந்நிய   தொழிலாளர்களையும்   மட்டுமே  கொண்ட   ஒரு   மாநகரமாக   விரைவில்  மாறிவிடும்”,  என்றாரவர்.