நோன்பு திறக்கும் நிகழ்வை அரசியலாக்கக் கூடாது என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் அறிவுறுத்தியுள்ளார்.
“நோன்பு திறப்பதை அரசியலாக்கக்கூடாது, அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. மாறாக, பல்லினங்களையும் ஒன்றிணைக்கும் மேடையாக அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”, என துவான் இப்ராகிம் இன்று முகநூலில் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது பாஸ் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் கவனம் தேவை என்றவர் நினைவுறுத்தினார்.
“என்ன பதிவிட்டாலும் அது முதிர்ச்சியான, ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்ப இருத்தல் வேண்டும். அதுதான் கட்சியின் கொள்கையுமாகும்.
“இக்கொள்கையைப் பின்பற்றாத எதுவும் கட்சியின் நிலைப்பாடு அல்ல. அது தனிப்பட்ட ஒருவரின் கருத்து மட்டுமே”, என்றார்.
கோம்பாங் பாஸ் தலைவர் சலேஹுடின் நசிர், டிஏபி தலைவர்கள் நோன்பு திறப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வதைக் கண்டித்திருந்ததை அடுத்து துவான் இப்ராகிமின் அறிக்கை வந்துள்ளது.