எஸ்ஆர்சி பணத்தை உண்மையான ரமதான் உணர்வோடு திருப்பிக் கொடுங்கள், முஸ்லிம்களுக்கு எம்பியின் வேண்டுகோள்

 

Returnsrcfundஅரசு நிறுவனமான எஸ்ஆர்சிஇன்டர்நேசனலிலிருந்து வந்ததாக சந்தேகிப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அதை ரமதான் உணர்வோடு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று பார்டி அமனா நெகாராவின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் ராவா கூருகிறார்.

இந்த புனித ரமதான் மாதத்தில், அம்னோ தொகுதித் தலைவர்களையும் பிஎன் கட்சிகளையும் அவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படி நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அப்பணம் மலேசிய மக்களுக்குச் சொந்தமானது என்று முஜாஹிட் ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

“நான் எனது முஸ்லிம் சகாக்களை, குறிப்பாக அம்னோவிலிருப்பவர்களை, எஸ்ஆர்சி பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்…அதை அவர்கள் பெறவில்லை என்பதை நிரூபிக்கத் தவறினால்.”

பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி அம்னோவும் பிஎன்னும் ரிம10.2 மில்லியனை நஜிப்பிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளன. அப்பணம் 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சியிடமிருந்து வந்தது என்று முன்னதாக கூறியிருக்கிறார்.

ரஃபிஸி அளித்த பயனடைந்தவர்களில் பட்டியல்:

ரிம170,000 – பண்டார் துன் ரசாக் பிஎன் (ஜூலை 22, 2014)

ரிம1.5 மில்லியன் – அம்னோ தலைமையகம் (ஜூலை 22, 2014)

ரிம1 மில்லியன் – பினாங்கு அம்னோ (ஜூலை 24, 2014)

ரிம5 மில்லியன் – அம்னோ தலைமையகம் (ஆகஸ்ட் 26, 2014)

ரிம1 மில்லியன் – சாபாவைச் சேர்ந்த பிஎன் பங்காளித்துவ கட்சி அப்கோ (பெப்ரவரி 17, 2015)

ரிம50,000 – பாடங் செராய் அம்னோ தலைவர் அஸ்மாடி தாலில் (பெப்ரவரி 17, 2015)

ரிம1 மில்லியன் பினாங்கு அம்னோ (பெப்ரவரி 26, 2015)

ரிம300,000 ஜோகூர்பாரு அம்னோ (மார்ச் 3, 2015)

இதற்கு எதிர்விலையாற்றிய அப்கோ உதவித் தலைவர் மார்கஸ் மோஜிகோ திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு பிஎன் கட்சிகள் நஜிப்பிடமிருந்து பணம் பெறுவது வழக்கமானது என்றார்.

“நஜிப் எனக்கு ஒரு காசுகூட கொடுக்கவில்லை”, மார்கஸ் மலேசியாகினியிடம் கூறினார்.

பினாங்கு அம்னோவும் ரஃபிஸி கூற்றை முட்டாள்தனமானது என்று கூறியது.