எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) விவசாயிகள் மற்றும் பூர்வக்குடி மக்கள் பிரதிநிதிகளை வேட்பாளர்களாகக் களமிறக்கவுள்ளது. நாட்டில் பிரபலமான, பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் அரசியல் சாணக்கியர்களையும் நிபுணர்களையும் குறிவைத்து தங்கள் பிரம்மாஸ்தரத்தை எய்யும் போது, பி.எஸ்.எம். எப்படி இவர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தது?
1998இல், பேராக் மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்த சில நூறு பேருடன் தொடங்கப்பட்ட கட்சியில், இன்று சபா, சரவாக் உட்பட சுமார் 25,000 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர். 1999 இல், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜசெக சின்னத்திலும், 2013 இல், பிகேஆர் சின்னத்திலும் பி.எஸ்.எம். போட்டியிட்டது. ஆனால் இம்முறை, பி.எஸ்.எம். “கை”ச் சின்னத்திலேயே வேட்பாளர்கள் நிற்கப்போவது மட்டுமின்றி, அரசியல் வாடையே இல்லாதவர்களை வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கட்சியின் தலைமைச் செயலாளர் ஆ. சிவராஜன் தெரிவித்தார். மேலும், இம்முறை சுமார் 20 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் பி.எஸ்.எம். அதன் வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் பிஎஸ்எம் ஒரு மாற்று தளம்
“மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.நீங்கள் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றால், மக்கள் பிரச்சனையை நீங்கள் தீர்க்கப் போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். ஆக, சிறப்பாக பணியாற்றக் கூடிய மூன்றாம் தரப்பினரை நோக்கி, மக்கள் தங்கள் பார்வையைத் திருப்ப வாய்ப்புள்ளது,” என்று சிவராஜன் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய சமூக–பொருளாதார சூழ்நிலை வாக்காளர்களின் ஆதரவைத் திசை திருப்பியுள்ளதை நம்மால் காணமுடிகிறது. பிரிட்டனில் தொழிற்கட்சி வெற்றி பெற்றதும், அமெரிக்காவில் பெர்னி சான்டர்ஸ் பக்கம் மக்கள் சாய்ந்ததும் இதற்கு ஒரு சான்று. இதைப்போன்றே, ஆட்சியிலிருக்கும் பாரிசான் மற்றும் எதிர்க்கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் மீது இன்று மலேசியர்களும் ஏமாற்றமடைந்து வருகின்றனர் என சிவராஜன் மேற்கோள் காட்டினார்.
“அதனால்தான், முன்னாள் பிகேஆர், பாஸ் மற்றும் ஜசெக கட்சி உறுப்பினர்கள் உட்பட, சில அம்னோ உறுப்பினர்களும் இன்று பி.எஸ்.எம்மின் உறுப்பினர்களாக மாறி வருகின்றனர். இவர்களில் அதிகமானோர் மலாய்க்கார இளைஞர்கள். ஆக, இன்றைய மலேசியர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்”, என அவர் மேலும் குறிப்பிட்டார்.
2008-ம் ஆண்டு முதல், பழங்குடி மக்களின் பூர்வீக நிலம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படும் விவசாய நிலங்களுக்காகவும் பி.எஸ்.எம். தொடர்ந்து போராடி வருகிறது. இப்போராட்டங்களை பி.எஸ்.எம். முன்னெடுத்திருந்தாலும்; சம்பந்தப்பட்ட மக்களே களமிறங்கி தங்கள் உரிமையைக் காக்கப் போராடியுள்ளனர். தங்கள் நிலங்களை அபகரிக்க ஆளும் அரசாங்கம் முனைந்த நேரம், தங்களுக்கு ஆதரவாக மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் குரல் கொடுக்கவில்லை என்பது அவர்களின் ஆதங்கம். “ஆக, தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அரசியல்வாதிகளுக்காக காத்திருக்காமல், தங்களுக்கான தேவைகளைப் பெற, ஒரு காலகட்டத்தில் தாங்களே குரலெழுப்ப வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தல் களத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்”, என அவர் கூறினார்
“ஆக, ‘பாரினை ஒழிப்போம்’, ‘பக்காத்தானுக்கு ஓட்டு போடுவோம்’, ‘பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்பளிப்போம்’ என்று அரசியல்வாதிகள் கூறினாலும், நிஜத்தில் மக்கள் யாருக்காகவும் காத்திருக்கவில்லை; அவர்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றார்கள்,” என்றாரவர்.
(நாளை- சோசலிசக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் யார்?)
அரசியல் கட்சிகளின் அவரவர் பலம் அவர்களுக்கே தெரியும். பொதுத் தேர்தலில் வாக்குகளைச் சிதறச் செய்ய விரும்புவோரும் ஆட்சி மாற்றத்தை விரும்பாதோரும் தனித்துப் போட்டியிடுவது நல்லதுதான்.
பாராட்டுக்கள்! 20ல் குறைந்தது 15ல் டெபாசிட் இழக்கும். ஆனாலும் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்கள் சரஸ் கூட இரு முறைகள் வைப்பு தொகை இழந்துள்ளார். ஆனாலும் மனம் தளராமல் அங்கேயே இருக்கிறார். வாழ்த்துக்கள். 1978ல் கேமரன் மலையில் ஜ.செ.க. முதன் முறையாக போட்டியிட்டு டெபாசிட் இழந்தது. அதன் பிறகு விடா முயற்சியாக அள்ளும் பகலும் பாடுபட்டு, கடுமையாக உழைத்தார் சிம்மாதிரி. தொடர்ந்தாற்போல ஐந்து முறைகள் போட்டியும் இட்டார். இம்முறை எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி எளிது என்பதால், 2013ல் அவரை ஒதுக்கிவிட்டு, அரைவேக்காடுகளுக்கு சீட் கொடுத்தது அவரது கட்சி. என்றாவது ஒரு நாள், கேமரன் மலையில் ஜ.செ.க. வை வெற்றிபெறாமால் நான் ஓயப்போவதில்லை என்று கூறுவார். 2013ல் ஜ செ.க.வை சட்டமன்றத்தில் வெல்ல வைத்து சாதனை புரிந்துள்ளார். PSM கட்சியாலும் முடியும். 2018ல் கேமரன் மலையில் PSM டெபாசிட் இழக்கும். அதன் பிறகு சிம்மாதிரியை போன்று சளைக்காமல் உழைத்து வெற்றி பெறுங்கள். எந்தெந்த தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கல் என்பதை கூறுங்கள். எங்கெங்கு வெற்றி பெரும் என்பதை நான் கூறுகிறேன்.