சோசலிசக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் யார்?

sureshஜூலை மாத இறுதிக்குள், கட்சியின் வேட்பாளர் தேர்வு முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும், வேட்பாளர்கள் பல்லினத்தைச் சார்ந்த கட்சி உறுப்பினர்களாகவும்; களப்பணி ஆற்றிய தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பர் என சிவராஜன் தெரிவித்தார். இதுநாள்வரை, ‘தொழிலாளர் உரிமைக்காகப் போராடும் கட்சி’ எனப்  பெயரெடுத்த   பி.எஸ்.எம்., ஒருவரின் பட்டம், பதவி, படிப்பைப் பார்த்து ஒருபோதும் வேட்பாளராக தேர்ந்தெடுக்காது என்பது உறுதி எனவும் அவர் கூறினார்.

“மக்கள் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட ஒருவரே எங்கள் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் கூட, அவரின் 40 ஆண்டுகளுக்கும் மேலான மக்கள் சேவையினாலேயே வேட்பாளர் ஆனார். ஆக, மக்கள் பணியாற்றும் ஒருவரே எங்கள் முதன்மை தேர்வு.”

jayakumar“கண்டிப்பாக ‘வான்குடை’ வேட்பாளர்களை நாங்கள் நிறுத்தப்போவதில்லை. போட்டியிடும் தொகுதியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது அவர்கள் மக்கள் பணியாற்றி இருப்பதோடு தங்கள் சொத்துகளைப் பொதுவில் அறிவிக்கவும் வேண்டும் என்பது நமது அளவுகோல். மேலும், தேர்தலில் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் அவர்கள் தொகுதியில் கட்டாயம் மக்கள் சேவை மையம் அமைத்து, சேவையாற்ற வேண்டும்; இன அரசியல் நடத்தக்கூடாது, வர்க்க அடிப்படையிலேயே பிரச்சனைகளைக் கையாள வேண்டும். அவர் பூர்வக்குடிகளின் பிரதிநிதியாக இருந்தாலும், மனித உரிமை, கொள்கை என அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பொதுவாக பேச வேண்டும்”, என சிவராஜன் கூறினார்.

சொத்துக்களைப் பொதுவில் அறிவிப்பது, தேர்தலில் போடியிடும் வேட்பாளரின் முக்கியக் கடமையென தாங்கள் கருதுவதாக சிவராஜன் கூறினார். காரணம், மக்கள் பிரதிநிதியாக பதவியேற்றப்பின், ஓர் அரசியல்வாதி இலஞ்சம், ஊழல் போன்றவற்றில் சிக்குவதற்கான வாய்ப்பு, வசதிகள் நம் நாட்டு அரசியல் அமைப்புகளில் அதிகம் உள்ளது. ஆக, மனவுறுதி இருந்தால் ஒழிய இவர்கள் தங்கள் பொறுப்புகளை மறந்து ஊழலில் சிக்கி பாமர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்காமல், பணக்காரர்களின் கைப்பாவையாக மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். ஆக, இதனைத் தவிர்ப்பதற்கு, வேட்பாளர்கள் கட்டாயம் தங்கள் சொத்துகளைப்  பொதுவில் அறிவிக்க வேண்டும்.

“அரசியல் என்பது ஒருவர் சொத்து சேர்க்கும் தளமல்ல என்பது எங்கள் கட்சியின் கொள்கை. இதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். பணம் சம்பாதிப்பது, சொத்துக்கள் சேர்ப்பது உங்கள் நோக்கமாக இருந்தால், நீங்கள் தாராளமாக வணிகத் துறையில் ஈடுபடலாம், அரசியலுக்கு வர வேண்டாம். அரசியலுக்கு வரும்போது இருக்கும் சொத்து மதிப்பும், நீங்கள் அரசியலைவிட்டு விலகும்போது இருக்கும் சொத்து மதிப்பும் கருத்தில் கொள்ளப்படும். பி.எஸ்.எம். கட்சியின் டாக்டர் ஜெயக்குமார், 2008-ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் தன் சொத்துகளை மக்களிடம் பொதுவில் அறிவிக்கிறார். கடந்த மே 17-ல், ஒன்பதாவது முறையாக அவர் சொத்துகளைப் பொது மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்தார்”, என சிவராஜன் தெரிவித்தார்.

14-வது பொதுத் தேர்தலில், பி.எஸ்.எம். போட்டியிடவிருக்கும் இடங்கள் – ஜொகூர், கிளாந்தான், நெகிரி செம்பிலான், பஹாங், பேராக், சிலாங்கூர் ஆகிய 6 மாநிலங்கள் – 80% முடிவாகிவிட்டது. சபா, சரவாக்கில் மாறுபட்ட தேவை மற்றும் அரசியல் சூழல் கருதி அங்கு இம்முறை போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

mat noor ayat psmமே 21-ல், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் லியோன் சின் க்வாய் லியோங் மற்றும் ஏண்டி சின் க்வாய் ஹேங் இருவரும் மெங்லெம்பு மற்றும் துரோனோ சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் பேராக் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கூட்டணியின் உறுப்பினர்கள்.

தெலும் நீர்-மின் அணை திட்டத்தில் பாதிக்கப்பட்ட போஸ் லானாய் பூர்வீகக் குடியினரைச் சேர்ந்த மாட் நோர் அயாட், பஹாங் ஜெலய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளார். ஜெயக்குமார் தனது நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் களமிறங்கவுள்ள வேளையில்  பி.எஸ்.எம். உறுப்பினர் சுரேஸ்குமார் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேமரன் மலையில் சுமார் 10 ஆண்டுகளாக, மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் துடிப்பான இளைஞர் சுரேஸ் என சிவராஜன் தெரிவித்தார்.

மேலும், பி.எஸ்.எம். கட்சியின் தேசியத் தலைவர் முகமட் நசீர் ஹசீம், மத்தியச் செயலவை உறுப்பினர் வி.செல்வம் ஆகியவர்களுடன்  தாமும் சுபாங் வட்டாரத்தில் போட்டியிடவிருப்பதாக சிவராஜன் தெரிவித்தார். கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன் உலு லாங்காட் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது என சிவராஜன் கோடி காட்டினார்.

(நாளை – பிஎஸ்எம் கட்சி தேர்தல் அறிக்கையின் கரு)