பிஎஸ்எம் அறிக்கையின் கரு – வறுமையை அகற்றுவது!

PSMபி.எஸ்.எம். கட்சியின் 14-வது பொதுத்தேர்தல் அறிக்கை சில மாற்றங்கள், திருத்தங்களுடன் விரைவில் வெளியிடப்படும் என சிவராஜன் கூறினார். அதில் முக்கியமாக, மக்களிடையே நிலவும் சமநிலையற்ற வாழ்க்கைமுறை மற்றும் குறைந்தபட்ச சம்பளம் குறித்து பேசப்பட்டிருக்கும். தற்போதைய விலைவாசியைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றார் போல குறைந்தபட்ச சம்பளம், ‘கண்ணியமான ஊதியம்என மாற்றியமைக்கப்படும்.

தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சமாக ரிம 1,500 சம்பளம் வழங்க வேண்டும் என பி.எஸ்.எம். தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால், தற்போதைய வாழ்க்கைச் செலவினங்களைப் பார்க்கும்போது, 5 பேர் கொண்ட சாதாரண குடும்பத்திற்கு, மாதம் ரிம 2,000 தேவைப்படுகிறது. ஆக, இந்த மாதச் சம்பள கோரிக்கையை நாம் மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமாகப்படுகிறது என்றார் அவர். தற்போது, தீபகற்ப மலேசியாவில் தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பளம் ரிம 1,000-ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் ரிம 920-ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

psm_eventஇவற்றோடு, கல்வி, சுற்றுச்சூழல், பழங்குடி மக்களின் பூர்வீக நிலஉரிமை, சட்டவிதிகளில் சில திருத்தங்கள், குறைந்த வருமானம் பெறுவோருக்கு (B40) அரசாங்க மலிவுவிலை வீடுகள் குறித்த விவரங்களும் பி.எஸ்.எம். தேர்தல் அறிக்கையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதோடு, தனியார் மருத்துவமனை கட்டுமானங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு, அரசாங்க மருத்துவமனைகளின் பயன்பாடு அதிகரிக்கப்படுவதோடு, அவற்றின் சேவைத் தரமும் சீரமைக்கப்படும். இதற்காக, பன்னாட்டு நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் வரிகள் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

நாட்டின் 14-வது பொதுத்தேர்தல், 2018 ஆண்டு மத்தியில் நடைபெற வேண்டும். ஆனால், தற்போதைய சூழலைப் பார்க்கும் போது, அதற்கு முன்னதாகவே தேர்தல் அழைப்புகள் வரலாம் என ஊகங்கள் உள்ளன.