பெர்சே அடுத்த நான்கு மாதங்களில் ரிம500,000 திரட்ட வேண்டும்

 

Bersihtocollect1தேர்தல் சீர்திருத்த கூட்டணியான பெர்சே அடுத்த நான்கு மாதங்களில்  ரிம500,000 திரட்ட உதவுமாறு பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் 14ஆவது பொதுத்தேர்தல் மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட பெர்சேயின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பேணுவதற்கு இந்நிதி தேவைப்படுகிறது என்று பெர்சேயின் தலைவர் மரியா சின் கூறுகிறார்.

நமக்கு நிதி உதவி தேவைப்படும் நேரம் இது என்று கூறிய மரியா, அதற்கான பட்டியலை வெளியிட்டார்.

பெர்சே சம்பந்தப்பட்டிருக்கும் வழக்குகள் மற்றும் நடந்து கொண்டிருக்கும் 120 விசாரணைக்கான செலவு ரிம100,000 ஆகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தின்கீழ் விதிக்கப்படும் அபராதம் ரிம10,000 வரையில் இருக்கும். பேராக், தைப்பிங்கில் இருக்கும் அதன் ஆதரவாளர்களில் ஒருவருக்கு பிணைப்பணம் ரிம3,000 ஐ பெர்சே சமீபத்தில் கட்டியுள்ளது.

இந்த வழக்குகளையும் விசாரணைகளையும் தவிர்த்து, தேர்தல் சம்பந்தமான 9 நீதிமன்ற வழக்குகளுக்கு பெர்சே ஆதரவு அளித்து வருகிறது.

வழக்குரைஞர்கள் அவர்களது சேவையை இலவசமாக வழங்கிறார்கள். ஆனால், ஆய்வுகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது என்றாரவர்.

வழக்குகளுக்கான செலவுகள் போக, வாக்காளர் கல்வி திட்டங்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டியுள்ளது.

தற்போது கையிருப்பாகவுள்ள ரிம500,000 பெர்சேயின் அடிப்படை நடவடிக்கைகளை அடுத்த ஏழு மாதங்களுக்கு மேற்கொள்ள உதவும் என்றார் மரியா.

கடந்த காலத்தில், பெர்சேயின் செலவினங்கள் பேரணிகள் ஏற்பாடு செய்வது சம்பந்தப்பட்டதாக இருந்தது என்று செய்தியாளர் கூட்டத்தில் மரியா மேலும் கூறினார்.

மரியாவுடன் ஐவி ஜேசியா, ஜே ஜே டென்னிஸ் மற்றும் பெர்சே துணைத் தலைவர் ஷாருல் அமான் முகமட் ஷாரி ஆகியோரும் செய்தியாளர் கூட்டத்தில் இருந்தனர்.

பெர்சேயிக்கு நிதி உதவி அளிக்க விரும்பும் ஆதரவாளர்கள் கீழ்க்கண்டவாறு நிதியை அனுப்பலாம்:

Bersih & Adil Network Sdn. Bhd.
Maybank account number 512295102931.