மீண்டும் பிரதமர் பதவியா?, சிந்திப்பேன் என்கிறார் மகாதிர்

 

PollfavoursMமீண்டும் பிரதமர் ஆவது பற்றி தாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியிருக்கும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் இன்று ஒப்புக்கொண்டார் – மகாதிருக்காக அப்படி ஒரு திட்டம் பக்கத்தான் ஹரப்பானிடம் இருக்குமானால்.

மகாதிரின் முகநூல் பக்கத்தில் ஒரு நேரடியான நிகழ்ச்சியில், 14 ஆவது பொதுத்தேர்தலில் பிஎன்னை எதிரணி தோற்கடித்தால், அவர் பிரதமராக ஒப்புக்கொள்வாரா என்று மகாதிரிடம் கேட்கப்பட்டது.

“நான் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலுள்ள எனது நண்பர்களை உதாசீனப்படுத்த முடியாது. அவர்களிடம் அப்படி ஒரு திட்டம் இருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தால், நான் அது குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்”, என்றாரவர்.

ஆனால், தாம் பிரதமாக விரும்பவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.

“நான் ஓய்வு பெற்றுவிட்டேன் என்று ஒருமுறை கூறியிருக்கிறேன், நான் மீண்டும் பிரதமராக மாட்டேன்”, என்று மகாதிர் கூறினார்.

அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ இரண்டாவது முறையாக நாட்டின் உச்சநிலை தலைவராகும் திட்டமோ தம்மிடம் இல்லை மீண்டும் மீண்டும் மகாதிர் கூறியிருக்கிறார்.

மகாதிரின் நிலைப்பாடு இப்படி இருந்தும், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் உள்ளிட்ட பலர் 14 ஆவது பொதுத்தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் பிரதமராவதற்கு மிகச் சிறந்த வேட்பாளர் மகாதிர்தான் என்று நம்புகின்றனர்.