பாலமுருகன் மரண விசாரணையில் போலீஸ் லாக்-அப் விதிகள் பற்றி தெரியாது என்கிறார் போலீஸ் அதிகாரி

 

Balmuruganinquiryதடுப்புக்காவல் கைதிகளைக் கையாளும் விதி முறைகள் பற்றி தமக்குத் தெரியாது என்று ஒரு முன்னாள் புலன் விசாரணை அதிகாரி தடுப்புக்காலில் இருந்த போது மரணமுற்ற எஸ். பாலமுருகன் சம்பந்தப்பட்ட விசாரணையில் கூறினார்.

வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுப்புக்காவல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை என்பது தமக்குத் தெரியும் என்று இன்ஸ்பெக்டர் முகமட் நூர் ஹுஸ்ரி ஜொஹாரி அமலாக்க அமைப்புகள் நேர்மை ஆணையத்தின் (இஎஐசி) தலைவர் யாக்கோப் முகமட் சாம் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் கூறினார்.

ஆனால், அவ்விடத்தில் யாரையும் தடுத்து வைக்கக்கூடாது என்று மாவட்ட போலீஸ் தலைவர் விடுத்திருந்த உத்தரவு பற்றி தமக்குத் தெரியாது என்றாரவர்.

தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை ரிமாண்ட் விசாரணைக்கு கொண்டுவரப்படுவதற்கு அல்லது ஷா அலாமில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களை வைத்திருப்பதற்குள்ள தற்காலிக இடம் பற்றி குறிப்பிடப்பட்ட போது, “வேறொரு சரியான இடம் இல்லை”, என்று ஹுஸ்ரி கூறினார்.

பாலமுருகன் மரணம் குறித்த இஎஐசி விசாரணையில் ஹுஸ்ரி 19ஆவது சாட்சியாவார். மொத்தம் 55 சாட்சிகள் சாட்சியம் அளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹுஸ்ரி வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்ததோடு பாலமுருகன் மற்றும் மூவரின் கொள்ளை குறித்து விசாரணை செய்து வந்தார்.

பாலமுருகன் பெப்ரவரி 8 அதிகாலையில் வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் தடுப்புக்காவல் பகுதியில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

இஎஐசியின் விசாரணை நாளை காலையில் தொடர்கிறது.