சிறைக்கூடங்களிலிருக்கும் சிசிடிவிகளுக்கு என்ன ஆயிற்று?, கேட்கிறார் கஸ்தூரி பட்டு

 

lockupcctvஅனைத்து போலீஸ், இமிகிரேசன் சிறைக்கூடங்கள் மற்றும் விசாரணை அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதையும் அவை இயங்கும் நிலையில் இருப்பதையும் புத்ரா ஜெயா உறுதிப்படுத்த வேண்டும். இது போக்கிரி போலீஸ் அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துகொள்வதைத் தடுப்பதற்கும் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடைய அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கும் உதவும் என்று டிஎபி பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கூறுகிறார்.

2013 ஆம் ஆண்டில், புக்கிட் அமான் நிருவாக இயக்குனர் மோர்டாஸா நஸரீன், அனைத்து சிறைக்கூடங்களிலும் அடைக்கப்பட்டிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறியிருந்ததையும் கைதிகளுக்கு மருத்துவ சோதனைகள் அளிப்பதற்கு போலீஸ் சுகாதார அமைச்சுடன் ஒத்துழைக்கும் என்று கூறியிருந்ததையும் கஸ்தூரி சுட்டிக் காட்டுகிறார்.

மேலும், 2013 ஆண்டில் அளிக்கப்பட்ட இந்த வாக்குறுதிகள் அமலாக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றனவா என்று அவர் கேட்கிறார்.

மிக முக்கியமானது: இந்த வாக்குறுதிகள் பின்பற்றப்படுகிறது என்பதை யார் கண்காணிப்பது? ஒரு கைதி உடல்நலமின்றி இருக்கையில் அவருக்கு உடனடியாக தேவையான சிகிட்சை அளிப்பதற்கு யார் பொறுப்பாளி? கைதிகளிடமிருந்து தகவல் சேகரிப்பதாக கூறிக்கொண்டு அவர்களை அடித்து நொறுக்கும் போக்கிரி அதிகாரிகளின் செயலுக்கு யார் பொறுப்பாளி?

2016 ஆம் ஆண்டில், புக்கிட் அமான் நிருவாக இயக்குனர் ஸுல்கிப்லி அப்துல்லா, நாட்டிலுள்ள 704 சிறைக்கூடங்களில் 58 சிறைக்கூடங்களில் சுயமாக கண்காணிக்கும் சாதுர்யமான சிசிடிவிகள் பொருத்தப்படும் என்றும் அவை சாதுர்யமான சிறைக்கூடங்கள் என்று அழைக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த 58 சிசிடிவை பொருத்துவதற்கு ரிம3.5 மில்லியன் செலவாயிற்று. ஜின்ஜாங் ஒருமுகப்படுத்தப்பட்ட சிறைக்கூடத்தில் இது ஒரு முன்னோடித் திட்டமாகப் பொருத்தப்பட்டது. பின்னர், இதர சிறைக்கூடங்களில் பொருத்தப்பட்டது. அனைத்து 58 சிறைக்கூடங்களிலும் இந்த சாதுர்யமான சிசிடிவிகள் பொருத்தப்பட்டு விட்டதாக இம்மே மாதத்தில் பெர்னாமா அறிவித்தது என்று கஸ்தூரி கூறுகிறார்.

8 விழுக்காடு போலீஸ் சிறைக்கூடங்களில் மட்டும் சாதுர்யமான சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 646 போலீஸ் சிறைக்கூடங்களின் நிலை என்ன? அனைத்து சிறைக்கூடங்களிலும் சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளதை புத்ரா ஜெயா உறுதி செய்ய எவ்வளவு காலம் பிடிக்கும் என்று கஸ்தூரி பட்டு மேலும் கேட்கிறார்.