அன்வார் இப்ராகிமின் தலைமைத்துவம் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபான் கூட்டணிக்குத் தலைமை தாங்கப் போகின்றவர் என்பதை முடிவு செய்வது அவசியமாகும் என பார்டி அமனா நெகரா உதவித் தலைவர் முஜாஹிட் யூசுப் ராவா கூறினார்.
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் தலைவர்களும் ஹராபானில் முன்னாள் எதிரணித் தலைவரின் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பியதில்லை என்று குறிப்பிட்ட அவர், அன்வார் பெற்றுத் தந்த வெற்றிகளைப் பங்காளிக் கட்சிகள் மறந்து விடவில்லை என்றார்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது, 2013 பொதுத் தேர்தலில் 53 விழுக்காட்டு வாக்குகளை எதிரணிக்குப் பெற்றுத்தந்தது ஆகியவை அன்வாரால் கிட்டிய வெற்றிகளில் அடங்கும்.
அன்வார் இப்போது சிறையில் இருப்பதால் களத்தில் தலைமைதாங்கப் போகின்றவர் யார் என்ற கேள்வி எழுகின்றது. அதனால்தான் இடைக்காலப் பிரதமர் குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது என்று முஜாஹிட் நேற்றிரவு பினாங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால், தேர்தலில் ஹராபான் வெற்றி பெற்றால் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை அவரது கட்சி பிரதமராக ஏற்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.