இது எளிய வழக்கு, சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் உதவி தேவையில்லை: ஐஜிபிக்கு அம்பிகா அறிவுறுத்து

ambikaபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    பிரபல   வழக்குரைஞர்    முகம்மட்  ஷாபி   அப்துல்லாவுக்கு   ரிம9.5 மில்லியன்   கொடுத்தார்   என்ற   குற்றச்சாட்டை   விசாரிக்க   சரவாக்  ரிப்போர்ட்    செய்தியாசிரியர்    கிளேய்ர்   ரியுகாசல்- பிரவுனின்    உதவி   தேவையில்லை    என்கிறார்      வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்   தலைவர்   அம்பிகா   ஸ்ரீநிவாசன்.

இது   சிக்கலற்ற   வழக்கு,   எளிதாக   தீர்வு  கண்டு  விடலாம்    என்றாரவர்.

அவ்விவகாரத்தில்  லண்டனில்   உள்ள   ரியுகாசல்    மலேசியாவுக்கு   வந்து   மலேசிய   போலீசுக்கு     உதவினால்   நன்றாக   இருக்கும்    என்று   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்    காலிட்   அபு   பக்கார்    கூறியிருப்பது   குறித்துக்    கருத்துரைத்தபோது   அம்பிகா    அவ்வாறு   கூறினார்.

“ஐஜிபி   ஒப்புக்காக   சொன்னதுபோல்   தெரிகிறது. அவருக்கு (ரியுகாசல்)   இண்டர்போல்   சிவப்பு  அறிக்கை (கைது   ஆணை)  காத்திருக்கிறது. இங்கு  கால்  வைத்ததுமே  கைது    செய்யப்படலாம்”,  என  அம்பிகா   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

“ஐஜிபி-இன்  கூற்று  ஓர்   எளிய   வழக்குக்குத்   தீர்வுகாண   மலேசிய   போலிசுக்கு  உதவி  தேவை   என்று   நினைக்க   வைத்து    அவர்களைத்            திறமையற்றவர்களாகக்  காண்பிக்கிறது.  ஆனால்,  அது  உண்மை  அல்ல”,  என்றாரவர்.

குற்றம்   சாட்டப்பட்டவர்கள்   எல்லாருமே  மலேசியாவில்   உள்ளனர்.  சொல்லப்பட்ட   வங்கிக்   கணக்குகளும்   இங்குதான்   உள்ளன.

“போலீஸ்   விசாரணையைத்    தொடங்குவதற்கு    இவையே   போதுமான   விவரங்கள்.

“பின்னர்   ஏன்  தயக்கம்?   தகவல்   சொன்னவர்களைச்   சாடாமல்   முறைகேடுகள்   குறித்து    தகவல்  அளிப்போருக்கு    ஐஜிபிக்கு    நன்றி  சொல்ல   வேண்டும்”,  என   அம்பிகா   கூறினார்.

கடந்த  வாரம்  சரவாக்   ரிப்போர்ட்   ஷாவிக்குக்  கொடுக்கப்பட்ட   பணம்  இரண்டு  பகுதிகளாகக்   கொடுக்கப்பட்டது    என்று   கூறியிருந்தது.

அன்வார்  இப்ராகிமின்   இரண்டாவது    குதப்புணர்ச்சி   வழக்கில்    ஷாபி   அரசுத்தரப்பு    தலைமை   வழக்குரைஞராக    இருந்தார்    என்பது   குறிப்பிடத்தக்கது.

சரவாக்   ரிபோர்டில்    வெளிவந்த    அச்செய்தியைச்  சுட்டிக்காட்டி    அன்வார்  இப்ராகிமைக்  குற்றவாளிக்க        அரசியல்   சதி    நடந்திருப்பதாக     எதிரணி  கூறி   வருகிறது.

சரவாக்  ரிப்போர்டின்  குற்றச்சாட்டை    மலேசியாகினியால்   உறுதிப்படுத்திக்கொள்ள   முடியவில்லை.

பலமுறை   தொடர்புகொண்டும்   ஷாபி  இவ்விவகாரம்   தொடர்பில்   கருத்துரைக்கவில்லை.