இசிக்கு எதிரான அன்வாரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது

 

Anwarappealdismissedசிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் தாம் 2015 ஆம் ஆண்டு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் வாக்களிக்கவும் அதே போல் அனைத்து எதிர்கால தேர்தல்களிலும் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும் அறிவிக்கும் பிரகடனம் கோரி முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்திருந்த மேல்முறையீட்டை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாக தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி உமி கால்தும் அப்துல் மஜிட்டின் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு அன்வார் செய்திருந்த நீதிபரிபாலன மறுஆய்வு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்து வழங்கியிருந்த தீர்ப்பை நிலைநிறுத்தி தீர்ப்புக்கூறியது.

இந்த மேல்முறையீடு செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறிய அவர், அன்வார் ரிம5,000 செலவுத் தொகையை தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்க வேண்டும் என்றார்.

இம்முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணம் எதையும் அமர்வு அளிக்கவில்லை. இந்த அமர்வின் இதர இரு நீதிபதிகள் வெர்னோன் ஓங் மற்றும் ஹாஸ்னா முகமட் ஹசிம் ஆவர்.

இத்தீர்ப்பு குறித்து கருத்துரைத்த அன்வார், இந்த அமர்வு எங்கள் பக்கம் போவதாகத் தெரிந்தது, ஆனால் தீர்ப்பு எதிர்மாறாக இருக்கிறது என்றார்.

பெடரல் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யுமாறு தமது வழக்குரைஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அன்வார் மேலும் கூறினார்.

அன்வார் அவரது நீதிபரிபாலன மறுஆய்வுக்கான மனுவில் தேர்தல் ஆணையம், அதன் முன்னாள் தலைவர் அப்துல் அசிஸ் யூசோப் மற்றும் அரசாங்கம் ஆகியோரை வாதிகாளாக பெயர் குறிப்பிட்டிருந்தார்.

தம்மை அரசமைப்புச் சட்டம் பிரிவு 119 இன் கீழ் வாக்களிக்க அனுமதிக்கும் பிரகடனத்திற்காக அன்வார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.