கிளானா ஜெயா எம்பி வொங் சென் அவரது தொகுதி மக்களுக்கான சமூகநல மாதத் திட்டத்தை இரத்துச் செய்தார். ஆனால், அதற்கான காரணம் கூறப்படவில்லை.
உதவி கேட்டு தம் அலுவலகம் வர நினைப்போரை வரவேண்டாம் என்றவர் கேட்டுக்கொண்டார்.
“இச்செய்தியை விரைவாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். என்னைப் பார்க்க வருவதற்காக அவர்கள் கையில் உள்ள சிறு பணத்தையும் போக்குவரத்துக்குச் செலவு செய்து விடக்கூடாது, பாருங்கள்”, என்றவர் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
வொங், ஒவ்வோர் ஆண்டும் ஒரு மாதத்தில் அம்மாதம் முழுக்க மக்களுக்கு உதவும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறார். இது நான்காவது ஆண்டாகும்.
உதவி கேட்டு மனுச் செய்தோரின் 300 மனுக்களை அவரது அலுவலகம் பரிசீலனை செய்து வைத்துள்ளது. ஆனால், அத்திட்டம் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஏன் உதவித் திட்டம் இரத்தானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. வொங்கைத் தொடர்பு கொண்டதற்கு அவர் காரணம் கூறவில்லை.
ஆனால், அவரது முகநூல் பதிவில் கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர் அரசாங்கத்திடமிருந்து ஒரு தொலைநகலி வந்ததாகவும் அதனை அடுத்து அத்திட்டம் இரத்துச் செய்யப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.