முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்கும் வரை, பெர்ஜயா நிறுவனத்திற்கு நிலப்பட்டா அல்லது அவர்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பெர்ஜயா சிட்டி தொழிலாளர்கள் வீட்டுச் செயற்குழு சிலாங்கூர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.
“புக்கிட் தகார், கோல குபு பாருவில் சுமார் 15 காணி நிலங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்த 245 தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும்வரை, பெர்ஜயா நிறுவனத்தின் நிலக் கையகப்படுத்துதல் மற்றும் நில மேம்பாட்டு விண்ணப்பங்களை நிறுத்தி வைக்க வேண்டுமென, மாநில அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கடந்த மே 20 தேதியிட்ட கடிதத்தில், இக்கோரிக்கையை நாங்கள் ஏற்கனவே மாநில அரசிடம் வழங்கியிருக்கிறோம்”, என பெர்ஜாயா சிட்டி தொழிலாளர்கள் வீட்டுக் குழுவின் ஆலோசகர் எஸ்.அருட்செல்வன் தெரிவித்தார்.
நேற்று, கோலாலம்பூர் சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமாக அருட்செல்வன் இத்தகவலை வெளியிட்டார்.
தேசிய நிலக் குறியீட்டின் படி, மாநில அரசாங்கத்திற்கு நிலக் கையகத்தை நிறுத்தி வைக்கும் உரிமை உண்டு என்பதனையும் அருட்செல்வன் சுட்டிக்காட்டினார்.
“தேசிய நிலக் கோட்பாட்டின் பிரிவு 204-ன் படி, நிலம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு முன்பு தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஏப்ரலில், பாதிக்கப்பட்ட மேரி தோட்டம், நைகல் கார்டன் தோட்டம், புக்கிட் தகார் , மிஞ்ஞாக் மற்றும் சுங்கை திங்கி தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
18 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், நம்பிக்கை இழந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், பெர்ஜாயா கோப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்திற்கு எதிராக சிட்டி சென்டரில் மறியலில் இறங்கினர்.
அப்போது அந்நிறுவனத்தின் இயக்குநர் ஷுராய்னா மூசா, தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகவும் மாநில அரசின் தலையீடு இல்லாமல் விரைவில் இப்பிரச்சனையைத் தீர்த்து வைக்க ஆவன செய்வதாகவும் உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை அவர்களிடமிருந்து எந்தவொரு ஆக்ககரமான பதிலும் வரவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தோட்டத் தொழிலாளர்கள் பாரிசான் மற்றும் பக்காத்தான் என இருதரப்பு அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சனைக்குச் சுமூகமாகத் தீர்வு காணத் தவறிவிட்டதாகக் கூறினர். “ஓட்டுக்காக மட்டும் எங்களைத் தேடி வருகின்றனர், தேர்தல் முடிந்தவுடன் இரு தரப்பினருமே காணாமல் போய்விடுகின்றனர்”, என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இது குறித்து விரிவாகக் கூறுகையில், 2008 இல் தோட்டத் தொழிலாளர்களுடன் நடந்த ஒரு கூட்டத்தில், முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் கிர் தோயோ, தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்க உறுதியளித்ததாக அருட்செல்வன் கூறினார்.
“இது தேர்தல் ஆண்டு என்பதால், மீண்டும் வெற்று வாக்குறுதிகளை நம்ப வேண்டி இருக்குமோ என நாங்கள் பயப்படுகிறோம்”, என அவர் அச்சம் தெரிவித்தார்.
இதற்கிடையே, இத்தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து இன்னும் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை எனவும், விரைவில் மாநில மந்திரி பெசார் அஸ்மின் அலியிடம் இது குறித்து பேசவிருப்பதாகவும் மாநில பரிவுமிக்க அரசு, வறுமை மற்றும் தோட்டப்புற தொழிலாளர்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் தெரிவித்தார்.
புக்கிட் தகார் , கோல குபு பாருவில் பெர்ஜயா நிறுவனத்தின் சில மேம்பாட்டு திட்டங்கள், அரசியல் காரணங்களுக்காகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கணபதி ராவ் தெரிவித்தார்.
“இதற்கிடையே, தோட்டத் தொழிலாளர்கள் பாரிசான் மற்றும் பக்காத்தான் என இருதரப்பு அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சனைக்குச் சுமூகமாகத் தீர்வு காணத் தவறிவிட்டதாகக் கூறினர். “ஓட்டுக்காக மட்டும் எங்களைத் தேடி வருகின்றனர், தேர்தல் முடிந்தவுடன் இரு தரப்பினருமே காணாமல் போய்விடுகின்றனர்”, என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.”
செருப்பால் அடியுங்கள், லஞ்சம் வாங்காமல் ஒட்டு போட்டிருந்தாள் .
லஞ்சம் வாங்கி ஒட்டு போட்டால் அப்படித்தான் இருக்கும்