தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தேர்தல் தொகுதி எல்லை மறுவரைவு வழக்குகளை விரைவுபடுத்தும்படி தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரீப் விடுத்துள்ள உத்தரவு கவலையளிக்கிறது என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் கூறுகிறார்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான சிலாங்கூர் மற்றும் மலாக்கா வழக்குகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அந்த வழக்குகளால் தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை மறுவரைவு நடவடிக்கை முடங்கியுள்ளன. ஆனால், பேராக்கில் தேர்தல் ஆணையம் வெற்றி பெற்ற ஒரு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை என்பதை வர்கீஸ் சுட்டிக்காட்டினார்.
நீதிபரிபாலனத்தில் நடுநிலை இருப்பது தெரிய வேண்டுமென்றால், நீதிமன்றங்கள் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வழக்குகளில் மட்டுமின்றி அது வெற்றி பெற்று மேல்முறையீட்டை எதிர்கொண்டிருக்கும் வழக்குகளிலும் சமநிலையைக் கடைபிடிக்க வேண்டும் என்று நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் வர்கீஸ் கூறுகிறார்.
மேலும், இந்த சிலாங்கூர் மற்றும் மலாக்கா வழக்குகள் விரைவுபடுத்தப்பட்ட முறை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வழக்குகள் விரைவுபடுத்தப்பட்டதில் நடைமுறை விதிகள் பின்பற்றப்படவில்லை, ஏனென்றால் இவ்வழக்கைத் தொடுத்தவர்களின் சம்மதத்தைப் பெறவில்லை என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.
பொதுநலன் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகள் அவற்றின் முக்கியத்துவம் காரணமாக விரைவுபடுத்தலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறும் வர்கீஸ், முன்னுரிமை அளிக்கப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பாதிப்புகள் ஏதும் இல்லாமல், வழக்குகளை முழுமையாகத் தயார் செய்துகொள்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல், அவசரமாக விசாரணைக்கான தேதி குறிப்பிடப்பட்டது மலேசிய தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன் வெளியிடப்பட்ட நடைமுறை விதி 2, 2011 க்கு (Practice Direction 2 of 2011) முரணானதாக இருக்கிறது என்று வர்கீஸ் சுட்டிக்காட்டுகிறார்.
இவ்விதிகளில் மிக முக்கியமானது, நடைமுறை விதி 2.3.2 ஆக்கும். இவ்விதி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒப்புதலின்றி ஒரு வழக்கு விசாரணையின் தேதி முன்னுக்கு மாற்றப்படுவதை அனுமதிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 19 இல் தொடங்குவதற்கு தேதி குறிப்பிடப்பட்டிருந்து. இப்போது சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் ஒப்புதலின்றி ஜூன் 20 க்கு விசாரணை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மலாக்காவாசிகளால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், மேல்முறையீட்டு விசாரணைக்கு ஜூன் 20 நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேல்முறையீடு செய்வதற்கான மனு சட்டத்துறை தலைவரால் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் வர்கீஸ் வெளிப்படுத்தினார்.
இது முற்றிலும் நடைமுறை விதிகளுக்கு முரணானது என்றாரவர்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் மிக வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை நீதித்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் கேட்டுகொள்வதாக வர்கீஸ் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.
இப்போது புரிகிறதா? ஒரு அரசாங்கம் எதனையும் எப்படியும் செய்யலாம்! நாம் தான் விழி பிதுங்க வேண்டும்!