அன்வரை விடுவிப்பீர்: மனித உரிமை அறவாரியம் பேரரசரிடம் கோரிக்கை

anwarஅனைத்துலக    அளவில்   மனித   உரிமைகளைக்   காப்பதற்காக   போராடும்    மனித   உரிமை    அறவாரியம்,   சிறையில்    உள்ள    முன்னாள்   எதிரணித்   தலைவர்    அன்வர்   இப்ராகிமை   விடுவிக்க   வேண்டும்   என்று     பேரரசர்    சுல்தான்    முகம்மட்   V-க்குக்  கடிதம்   எழுதிக்   கேட்டுக்கொண்டுள்ளது.

அன்வர்    இப்ராகிமின்  இரண்டாவது   குதப்புணர்ச்சி   வழக்கில்    அரசுத்  தரப்பு    தலைமை    வழக்குரைஞராக     செயல்பட்ட       முகம்மட்   ஷாபி   அப்துல்லாவுக்குப்     பிரதமர்     நஜிப்     அப்துல்  ரசாக்    ரிம9.5 மில்லியன்    கொடுத்ததாகக்   கூறப்படுவதைச்   சுட்டிக்காட்டி    அவ்வழக்கில்     அரசியல்    தலையீடு   நிகழ்துள்ளது   என்று   நியு  யோர்கில்   உள்ள   அந்த   என்ஜிஓ     கூறியது.

“அன்வரின்   வழக்கில்  மறுக்க  முடியாதபடி     அரசியல்   தலையீடு    நிகழ்ந்துள்ளதை    ஏற்று   அவரைச்   சிறையிலிருந்து   விடுவிக்க  வேண்டும்,  அவர்    குற்றவாளி    என்று    அளிக்கப்பட்ட    தீர்ப்பையும்    இரத்துச்    செய்ய  வேண்டும்   எனப்   பணிவுடன்   கேட்டுக்கொள்கிறோம்”,  என்று  அது    கூறியது.

பல  கேள்விகளை   எழுப்பும்   இப் பணக்கொடுப்புகளும்  அன்வரின்  குற்றச்சாட்டுக்கு   ஆதரவாக     போதுமான    ஆதாரங்கள்    இல்லாததும்   அன்வரின்   அரசியல்     எதிரிகள்    அவரது     அரசியல்    செல்வாக்கையும்    நன்மதிப்பையும்   ஒரே  அடியாக   ஒழித்துக்கட்ட    திட்டமிட்டிருந்தார்கள்    என்பதைக்   காண்பிப்பதாக    அது   குறிப்பிட்டது.

ஷாபிக்கு   எதிராகக்   கூறப்பட்ட   குற்றச்சாட்டுகளுக்கு    அவர்  இதுவரை  மறுப்பு     தெரிவிக்கவில்லை     என்பதையும்    அது    சுட்டிக்காட்டியது.