சந்தை விலை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு உதவியாக அரசாங்கம் புதிய விலை நிர்ணயிப்பு முறை ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விற்பனையாளர்களிடம் பரிவு காட்ட வேண்டும் என்று உள்நாட்டு வாணிக, கூட்டுறவு பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின் கேட்டுக்கொண்டிருப்பதைக் குறைகூறிய பிகேஆர் திரெங்கானு பண்டார் சட்டமன்ற உறுப்பினர் அஸான் இஸ்மாயில், எரிபொருள் விலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் பரிவு காட்டப்படுகிறதா என்று வினவினார்.
“விலைகள் எதிர்பாராமல் வீழ்ச்சி அடையும்போது இழப்புகளை எதிர்நோக்கும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களிடம் பரிவு காட்ட வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.
“ஆனால், அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து கவலைப்படுகிறதா?
“கடந்த காலத்தில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்பட்ட விதத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அரசாங்கத்துக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.
“என்னைக் கேட்டால், இது மக்களின் நலனை அல்லாமல் விற்பனையாளர்களின் நலன்காக்கும் ஒரு தந்திரம் என்பேன்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
எரிபொருள் விலை குறையும் போது பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. காரணம் விலைதான் குறைக்கப்படுகிறதே தவிர, அவர்களுக்கு உரிய லாபம் குறைக்கப்படுவதில்லை.
அவர்களின் பிரச்சினை என்னவென்றால் விலை குறைக்கப்படும்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் பழைய விலைக்கு வாங்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு லாபம் குறைகிறது என்று குறைபட்டுக்கொள்கிறார்கள். நியாயம் தானே அதாவது விலை உயரும்போது கையிருப்பில் உள்ள எரிபொருளால் அவர்கள் கொள்ளை லாபம் அடைகிறார்களே. எனவே, எரிபொருள் விலை குறையும்போது லாபம் குறைவதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருள் விலை உயரப்போகிறது என்று தெரிந்தவுடனே இரவி 10-மணிக்கெல்லாம் எரிபொருள் தீர்ந்து விட்டது என்று சொல்லி பலமுறை கதவை அடைத்ததை வாகனமோட்டிகள் மறந்து விடவில்லையே..