1எம்டிபி விசாரணைக் கோப்புகளை மீண்டும் திறக்கக் கோரி போலீஸுக்கும் எம்எசிசிக்கும் சவால் விடுகிறார் வழக்குரைஞர் ஹனிப்

Openthefilesஅமெரிக்க நீதித்துறை (டிஒஜே) 1எம்டிபி சொத்து சம்பந்தமாக கடந்த வாரம் ஒரு சிவில் வழக்கைத் தொடங்கியுள்ளது. அதைப் பின்பற்றி 1எம்டிபி பற்றிய விசாரணையை மீண்டும் தொடங்கும்படி போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கருக்கும் எம்எசிசி தலைவர் ஸுல்கிப்லி அஹமட்டுக்கும் வழக்குரைஞர் ஹனிப் ஹாட்டிரி அப்துல்லா சவால் விட்டுள்ளார்.

இந்த 1எம்டிபி விவகாரம் குறித்து அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஆகியோரின் ஒத்துழைப்பைக் கோரும்படி ஹனிப் மலேசிய ஏஜி முகமட் அபாண்டி அலியையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

1எம்டிபி விவாகாரங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சுயேட்சையாக ஆய்வு செய்து மதிப்பீடு செய்வதற்கு மூத்த அரசு தரப்பு வழக்குரைஞர் (டிபிபி) அல்லது மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தில் அங்கம் பெற்றுள்ள 18,000 வழக்குரைஞர்களில் ஒரு மூத்த வழக்குரைஞரின் தலைமையில் ஜூலை 31 க்குள் ஒரு சிறப்புக்குழுவை அபாண்டி அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்குழுவுக்கு ஏஜி அபாண்டி தலைமை ஏற்கவோ போலீஸ் மற்றும் எம்எசிசி மேற்கொண்ட விசாரணைகளின் விளைவுகள் பற்றி முடிவோ எடுக்கக்கூடாது, ஏனென்றால் அவர் பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வழக்குரைஞர் போல் நடந்து கொண்டுள்ளார் என்று ஹனிப் மேலும் கூறினார்.

முன்மொழியப்பட்டுள்ளதை ஜூலை 31 க்குள் அம்மூவரும் செய்யத் தவறினால், இந்த 1எம்டிபி ஊழல் விவகாரத்தை மூடிமறைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் இந்த மூவரும் உடந்தையாக இருக்கின்றனர் என்ற தெளிவான முடிவுக்கு எந்த ஒரு நேர்மையான மலேசியரும் வருவர். மூடிமறைத்தலும் மக்களுக்கு எதிரான ஒரு குற்றச்செயலாகும் என்றாரவர்.

கடந்த ஏப்ரலில், ஐஜிபி காலிட் 1எம்டிபி சம்பந்தப்பட்ட விசாரணை ஆவணங்கள் ஏஜியிடம் கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்தார். ஆனால், ஏஜியிடமிருந்து எவ்வித அறிக்கையும் வரவில்லை என்பதை ஹனிப் குறிப்பிட்டார்.

டிஒஜே தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கை ஐஜிபி காலிட் நிராகரித்தை ஹனிப் முட்டாள்தனமானது என்று வர்ணித்தார்.

எம்எசிசியின் தலைவர் ஸுல்கிப்லி, யார் எந்தப் பதவியிலிருந்தாலும் ஊழல் விசாரணையில் தாம் கடுமையாக இருக்கப் போவதாக கூறியிருந்ததை ஹனிப் அவருக்கு நினைவுறுத்தி அவர் சொன்னதை செய்ய வேண்டும் என்றார்.

டிஒஜே மேற்கொண்டுள்ள நடவடிக்கை அந்நிய நாட்டின் தலையீடு என்றும் நஜிப் மற்றும் ரோஸ்மாவுக்கு எதிரான எழுத்துமூலமான அவதூறுகள் என்றும் கூறிக்கொள்ளும் மலேசிய அரசாங்கம் ஏன் தாம் பரிந்துரை செய்த கீழ்க்கண்ட மூன்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் கேட்டார்:

– இந்த வழக்கு தவறானதோடு போலீயானது என்பதற்காக மலேசியாவுக்கான அமெரிக்க தூதரை அழைத்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க கோர வேண்டும் மற்றும் அத்தூதரை “ஏற்றுக்கொள்ளப்படாதவர்” என்றும் அறிவிக்க வேண்டும்;

– இந்த அமெரிக்க வழக்கில் நஜிப்பும் ரோஸ்மாவும் தலையீடு செய்வதற்கு மனு செய்து அவர்களுக்கு எதிரான போலியான குற்றச்சாட்டுகளை டிஒஜே தாக்கல் செய்துள்ள வழக்குப் பத்திரங்களிலிருந்து அகற்ற வேண்டும்;

– டிஒஜேயால் கூறப்பட்டுள்ள அவதூறுகளுக்கு எதிராக நஜிப், ரோஸ்மா மற்றும் அரசாங்கம் டிஒஜே மீது வழக்கு தொடர வேண்டும்.

டிஒஜே நடவடிக்கைக்கு எதிராக அறிக்கைகள் பலவற்றை அரசாங்க அமைச்சர்கள் வெளியிட்டிருந்த போதிலும், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது சம்பந்தமாக அமேரிக்க தூதரகம் இன்னும் எந்த ஆட்சேபக் குறிப்பையும் மலேசியாவிடமிருந்து பெறவில்லை என்பதை ஹனிப் சுட்டிக்காட்டினார்.