கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங், மூன்று தசாப்தங்களுக்குமுன் அன்னிய செலாவணி (ஃபோரெக்ஸ்) வாணிகத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரித்த சிறப்புப் பணிக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப் பிரச்னைகளால் மத்திய வங்கியிடமிருந்து ஆதாரங்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியதாக பணிக்குழு கூறியதை நம்ப முடியவில்லை என லிம் கூறினார்.
“பணிக்குழு அமைச்சரவையால் அமைக்கப்பட்டது அதனிடம் ஆவணங்களை ஒப்படைக்க நிதி அமைச்சும் பேங்க் நெகராவும் எப்படி மறுக்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை.
“நிதி அமைச்சிலும் பேங்க் நெகராவிலும் பணிக்குழுவுடன் ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் இருப்பதாக முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகம்மட் சிடிக் ஹசான் கூற வருகிறாரா?
“அந்த அதிகாரிகள் யார் என்பது பணிக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா?”, என லிம் இன்று ஓர் அறிக்கையில் வினவினார்.
பணிக்குழு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் போன்ற முக்கியமானவர்களை விசாரணைக்கு அழைக்காதது ஏன் என்றும் அவர் வினவினார்.
“விசாரணையில் மூன்று முக்கிய பெயர்கள் விடுபட்டுள்ளன- அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்; அப்போது தற்காப்பு அமைச்சராக இருந்த இப்போதைய பிரதமர்; அன்று தலைமைச் செயலாளராக இருந்த அஹ்மட் சர்ஜி ஹமிட் ஆகியோரே அவர்கள்”.
விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களில் லிம்மும் அன்வார் இப்ராகிமும் உள்ளிட்டிருந்தனர்.
“நான் விசாரணைக்குச் சென்றபோது அமைச்சரவை பொறுப்புடன் நடந்து கொள்வதிலும் நல்லாட்சிக் கோட்பாடுகளிலும் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என்று வினவினேன்”, என்றாரவர்.
“அப்போதைய அமைச்சர்களும் அரசு உயர் அதிகாரிகளும், எம்பிகளும் ஊடகங்களும் நல்லாட்சிக் கோட்பாடுகளைப் பின்பற்றவும் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் தவறி விட்டனர் என்பதுதான் பேங்க் நெகரா அன்னிய செலாவணி இழப்பு நமக்குப் புகட்டும் உண்மையான பாடமாகும் என்றேன்.
“பூதாகரமான விவகாரம் ஒன்றிருக்கிறது- 1எம்டிபி ஊழல்- அதை அரசில் உள்ளவர்கள் கண்டுகொள்ளாதிருப்பது ஏன் என்று பணிக்குழுவை கேட்டேன்.
“இந்த முக்கிய விவகாரம் பணிக்குழு அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறா?”, என்றவர் வினவினார்.